அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Monday, April 16, 2012

விதியை நம்புதல்


விதியை நம்புதல்

நமக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான் விதியை நம்புவதாகும்.

விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப் பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்றாலும், விதியைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சர்ச்சை செய்யக் கூடாது என்று சொல்லி­ விட்டார்கள்.

ஏனென்றால் ஒரு கோணத்தில் பார்க்கும் போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.

விதி என்று ஒன்று இருந்தால் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்ற கேள்வி அதில் எழும்.

விதி என்று ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்குத் தெரியாது என்று ஆகிவிடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்ற கேள்வி வரும்.  விதி, இல்லை என்று சொன்னாலும் விபரீதம்; இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்.

எனவே தான் விதியை நம்ப வேண்டும்; அதே நேரத்தில் நம் செயல்பாட்டை விதியின் மீது பழி போட்டு விடாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதை விளங்கிக் கொள்ளும் அறிவை அல்லாஹ் நமக்குத் தரவில்லை என்று தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்திற்கு ஏற்படுகிற நன்மையை இஸ்லாம் கூறுகிறது.

விதியை நம்பாதவனுக்கு தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டால் அதை எண்ணி எண்ணியே அவன் மாய்ந்து போவான்.

விதியை நம்புபவனுக்கு இழப்பு ஏற்பட்டால் நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் இறைவன் கையில் இருக்கிறதுஎன்று எண்ணுவான். இந்த இடத்தில் விதி, சுமை தாங்கியாக வந்து நின்று அவனது கவலையைப் போக்கும்.

அளவுக்கு அதிகமான செல்வத்தை, புகழை, மதிப்பை ஒருவன் பெறும் போது அது அவனுக்கு ஆணவத்தை ஏற்படுத்தும். அப்போது இது எல்லாம் இறைவனின் நாட்டம்என்ற நினைத்துக் கொண்டால் அவன் தன்னடக்கம் பெறுவான்.


உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 57:23)

நடந்து விட்ட விஷயத்திற்குத் தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த தத்துவத்தை இந்த வசனத்தி­ருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எதற்காக விதியை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான் என்பது பற்றி மட்டும் பேசலாம். ஏனென்றால் இந்த வசனம் அப்படித் தான் பேசுகிறது.

No comments:

Post a Comment