அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Friday, November 13, 2015

அல்லாஹ்வின் அருள்மொழி

நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல்!
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்.(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 3:110)
அல்லாஹ்வை மறக்க வைத்த உலகின் வீணான ஆசைகள்!
தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக! அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன. (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 15:42-3)
இத்தகைய கொடுமைக்காரர்கள் அல்லாஹ்விடம் அச்சம் கொள்ளமாட்டார்களா?
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 2:114)
அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை உறுதியாக்கி, வீண்பெருமையை தவிர்த்தல்!
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)
விசாலமான இறையருள்!
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:261)
அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான்!
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள். பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி(அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:156)
இறைவன் நாடியவருக்கே நேர்வழி
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!'' (அல்குர்ஆன் 28:56)