அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Friday, April 22, 2011

ஸஃப்பை நேராக்கிக் கொள்ளுங்கள்!

சம்பிரதாயத்திற்காகவா?
"ஸஃப் -களை நேராக்கிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!" – என்று கூறப்படுவதை நாம் பலமுறை பள்ளிவாசலில்; கேட்டிருப்போம். இது ஒரு சம்பிரதாய வார்த்தையா? அல்லது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்ததா? என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாக அறிந்து கொள்வதற்காகவே இச்சிறிய கட்டுரை.

அணியணியாக... மலக்குகள்!

அல்லாஹ் தன் திருமறையில், ‘அணியணியாக நிற்போர் மீது சத்தியமாக!’ (37:1) என்று கூறுகின்றான். இங்கே ‘அணியணியாக நிற்போர்’ என்பது வானவர்(மலக்கு)களைக் குறிக்கும் என்பதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: அத்தப்ரி 21:7)

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, மஸ்ரூக் ரளியல்லாஹு அன்ஹு, ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு, இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு, முஜாஹித் ரளியல்லாஹு அன்ஹு, அஸ்-ஸுத்தீ ரளியல்லாஹு அன்ஹு, கதாதாஹ் ரளியல்லாஹு அன்ஹு, அர்ரபீ பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் கருத்தும் இதுவே. (நூல்: அல்-குர்துபி 15: 61, 62)

மேலும் ‘வானவர்கள் சுவனத்தில் அணியணியாகவே இருக்கின்றனர்’ என்பதாக கதாதாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: அத்-தபரி 21:7)

இதையே, இன்னொரு இடத்தில், ‘நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கின்றோம்’ (37:165) என்று வானவர்கள் (மலக்குகள்) கூறுவதாக திருக்குர்ஆனில் ஏக இறைவன் குறிப்பிடுகிறான். இப்படி அணியணியாக நிற்கும் வானவர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவர்களே இப்படி கூறுகிறார்கள்:

‘நிச்யமாக நாங்கள் (அவனை – அல்லாஹ்வைப்) புகழ்ந்து துதி செய்து கொண்டிருக்கின்றோம்.’ (அல்குர்ஆன் 37:166)

ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண்!

அப்படி அணியணியாக நிற்போர் எப்படி நிற்கிறார்கள்? எப்படி நிற்க வேண்டும்?

‘விசுவாசிகளே! எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட (பலமான) அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.’ (அல்குர்ஆன் 61:4)

அல்லாஹ் இவ்விடத்தில் அணியணியாக நின்று போர் புரிபவர்களை நிச்சயமாக நேசிப்பதாகக் கூறுவது அணியணியாக நிற்பதின் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது என்பது தெளிவு. இக்கரத்தையே, ‘அல்லாஹ்வுக்காக அணியணியாக நின்று போரிடுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்’ என்று ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழி

திருமறைக் கூறும் நெறிமுறைகளைத் தம் அன்றாட வாழ்வில் செயல்படுத்தி, மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விஷயத்தில் எவ்லாறு நடந்து காட்டினார்கள்? என்பதைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகள் மீது போர்த் தொடங்கும் முன்னர், தம் படையினர் அணிவகுத்து நிற்பதை விரும்பினார்கள்.

மேற்குறிப்பிட்ட திருமறை வசனத்தில் (61:4) அவ்வாறே அணியில் (இருந்து பின்வாங்காது) நிற்கும்படி அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு கற்பிக்கிறான்.’ (நூல்: அல்-குர்துபி 18:81)

‘ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட (பலமான) அரணைப்போல் அணியில் (இருந்து பின்வாங்காது) நின்றுஸ’ எனும் வாசகம், போரிட அணிவகுத்து நிற்கும் ஒவ்வொருவரும் ஒருவரோடு ஒருவர் உறுதியாக இணைக்கப்பட்டவர்களைப் போன்று – எனப் பொருள் தரும் என்பதாக ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு மேலும் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் பங்கு என்ன?

‘உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது, ‘அணியணியாக (உங்களைப் பின்பற்றி வரக்கூடிய) ஆயிரம் மலக்குகளைக் கொண்டு, நிச்யமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்’ என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்’ (அல்குர்ஆன் 8:9) இந்தத் திருவசனத்தில் வாக்குறுதியளித்தவாறு பத்ரு போர்க் களத்தில் மலக்குகளை அனுப்பி அல்லாஹ் உதவி புரிந்ததை வரலாறு நமக்குக் கூறுகிறது.

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் எனும் எல்லாவித வேறுபாடுகளும் நொறுங்கும் செயலல்லவா தொழுகையில் முஸ்லீம்கள் தோளோடு தோள் உராய அணிவகுத்து நிற்கும் செயல்!

இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டியது நமது கடமை என்பதை அனைவரும் உணர்ந்தால் ஒற்றுமைக்கு அது வித்திடும் என்பதை மனதில் கொள்வோம்.

www.nidur.info

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .

பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.

அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.

அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .

நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?

வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.

உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ...
‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)

பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்ததுஸ. (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .

பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாக.
source: http://azeezahmed.wordpress.com

நான் ஒரு பெண்!

நான் ஒரு பெண்!

o நான் ஒரு பெண் என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.

o நான் ஆண்களின் உலகில் பிறந்தேன். ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.

o திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!

o என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

o நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.

o நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

o எனக்கு மட்டும் Good Touch, Bad Touch கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். என்னை அணுகுபவர்களிடம் நான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

o நான் அணியும் ஆடைகளில் கவனமாக இருக்கவேண்டும்.

o நான் யார் என்பதை என் தோற்றத்தால் நிர்ணயம் செய்கிறார்கள்.

o நான் பலவீனமானவள். பாதுகாக்கப்பட வேண்டியவள்.

o உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரியாதவர்கள் என்று யாரும் எப்போதும் என்னை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கலாம்.

o எனக்கு நேரும் அவமானங்களை நான் மென்று விழுங்கவேண்டும்.

o எனக்கு மூன்று வயதாகும்போதே என் திருமணம் குறித்த கவலைகள் என் பெற்றோரை ஆக்கிரமித்துவிடுகின்றன.

o வீட்டில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டால், முதலில் என் படிப்பு நிறுத்தப்படுகிறது.

o வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் என்னைக் கட்டுப்படுத்த என் சமூகத்துக்கு முழு உரிமையுண்டு.

o வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என் மீது அதிகாரம் செலுத்தப்படுவதை நான் முழு விழிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

o கட்டளைகள் பிறப்பிப்பது ஆண்களின் இயல்பு என்பதை நான் அறிவேன். கீழ்படிவது என் உரிமை.

o நான் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் தொடக்க நிலையில் இருக்கும் எந்தவொரு ஆண் ஊழியரைக் காட்டிலும் நான் தாழ்ந்தவள்தான்.

o என் விருப்பம் அல்ல, என்னை மணப்பவரின் விருப்பமே இறுதியானது. திருமணச்செலவு என்னுடையது.

o திருமணத்துக்குப் பிறகு என் முந்தையை வாழ்க்கையை நான் மறந்துவிடவேண்டும். என் பெயர் மாற்றமடைகிறது. என் அடையாளம் மாற்றமடைகிறது.

o என் கணவனின் கல்வித் தகுதியைவிட என்னுடையது ஒரு படியேனும் கீழானதாக இருக்கவேண்டும். தவறினால், நான் அகந்தை கொண்டவளாகச் சித்தரிக்கப்படுவேன்.

o என் சம்பளத்தை என் கணவரிடம் ஒப்படைக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட செலவுகள் கிடையாது. என் தேவைக்கான பணத்தை என் கணவரிடம் கோரி பெற்றுக்கொள்கிறேன்.

o எனக்கென்று தனியே வங்கிக்கணக்கு கிடையாது.

o என் சிந்தனைகளை நான் முன்னெச்சரிக்கையுடன் சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கொள்கிறேன்.

o என் ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப்படுகிறது; ஒப்பிடப்படுகிறது; எடைபோடப்படுகிறது.

o நான் கேள்விகள் கேட்பதில்லை. பதில்களை மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன்.

o என் கணவரின் பேச்சை (எப்போதாவது) நான் மீறினால், நான் கண்டிக்கப்படுகிறேன். நான் சொல்வதை என் கணவர் (எப்போதாவது) செவிமெடுத்தால், அவர் பரிகசிக்கப்படுகிறார்.

o எனக்கான சுதந்தரத்தை என் கணவர் அவ்வப்போது அளிக்கிறார்.

o வீட்டுப் பணிகள் என்னுடையது. என் கணவர் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கக்கூடாது.

o எனக்கான முடிவுகளை என் கணவரே எடுக்கிறார்.

o பேருந்துகளில், ரயில்களில், பொது இடங்களி்ல் அனுபவிக்க நேரும் பாலியல் இம்சைகளை நான் மென்று விழுங்கிக்கொள்ளவேண்டும்.

o நான் செய்தித்தாள்கள் படிக்கவேண்டியதில்லை. அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டியதில்லை. என் உலகம் சமையலறையில் தொடங்கி படுக்கையறையில் நிறைவடைகிறது.

o என் துறை தொடர்பாக நான் எந்த லட்சியங்களையும் கொண்டிருக்கலாகாது. நான் தொடர்ந்து பணியாற்றவேண்டுமா வேண்டாமா என்பதை நான் முடிவு செய்யமுடியாது.

o என் தனிப்பட்ட சாதனைகள் முக்கியமற்றவை. என் திறன்கள் முக்கியமற்றவை.

o என் கணவனின் மனைவி என்று நான் அறியப்படுகிறேன்.

o நான் எந்த மத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், என் உலகை நான் என் பர்தாவின் வழியாகவே காண்கிறேன்.

o என் கணவர் படித்தவராக இருந்தாலும், கல்லாதவராக இருந்தாலும் என் நிலை இதுவே. கிராமங்களில் வாழ்ந்தாலும் நகரங்களில் வாழ்ந்தாலும் என் அடையாளம் மாறிவிடுவதில்லை.

o நான் மூப்படைந்த பிறகும் எனக்கான பாடங்களை கற்றுக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாக, Good Touch, Bad Touch. முந்தையது அபூர்வம் என்ற போதிலும்.
source: http://www.penniyam.com/