அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Saturday, November 27, 2010

பெண் பாவம் பொல்லாதது!

[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவரிடம் உள்ள மற்றொரு நற்குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும்’. (அறிவிப்பாளர்: ஹளரத், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தை உணர்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது.]

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (திருக்குர் ஆன் வசனம் 2: 228)
மஹர் தொகைக்கு மாற்றமாக, வரதட்சணை என்பதை திருமணப்பணமாக நாட்டு நடப்பில் கருதப்படுகிறது. அது ஒரு ஹராமான பணம். அது பாவத்தின் சின்னம். அந்த பணத்தை ஒரு தட்டில் வைத்து, அத்துடன் தேங்காய் மஞ்சளும் வைத்து, ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் ஒன்றுகூடி பவ்வியயமாக அத்தட்டை கைமாற்றிக் கொள்ளும் காட்சி இருக்கத்தான் செய்கிறது.

‘இஸ்லாம் மட்டும் தற்கொலையை அனுமதித்திருந்தால் ஊர்க்கிணறுகளிலெல்லாம், வரதட்சணை கொடுக்க முடியாத பெண்களின் சடலங்களால் நிரம்பி வழியும்.’ என்கிறார் ஒரு கவிஞர்.

மணவாளன் அனுபவிப்பது வரதட்சணை பணம் மட்டுமா? ஒரு பெண் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் சீர் சாமான்களையும் அவன் பயன்படுத்துகிறான். தான் படுத்துறங்குவது மனைவி கொண்டு வந்த கட்டிலிலே! தான் உட்கார ஒரு சோஃபா செட்டு கூட வாங்கிப்போட வக்கில்லாதவன் மனைவியின் சோஃபாவிலே சுகம் காணுகிறான். பீரோ என்ன? ஃபிரிஜ் என்ன? உழகை;கத் துப்புக்கெட்ட அவன் பயணம் செய்வது கூட மனைவி வீட்டாரின் பணத்திலே!
ஆனால் சட்டம் என்ன சொல்கிறது:
‘தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை கணவன் பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஒரு பெண்ணுக்கு அதிகாரம் உண்டு.’ (ரத்துல் முக்தார் பாகம் 3 பக்கம் 584)

அதுபோன்றே தனக்குச் சொந்தமான சல்லிக்காசைக் கூட அவள் கணவனுக்குத் தரவேண்டியதில்லை. அவள் அத்தெகையை தனியாக வைத்து சிறு தொழில்கள் மூலம் அந்த முதலீட்டைப் பெருக்கலாம். அவள் அதை தனது பிற்காலப் பாதுகாப்புக்காக சேமித்து வைக்க கடமைப் பட்டிருக்கிறாள்.
சீர் சாமான்களை மட்டுமல்ல, பெண் பெயரில் ஏதாவது வருவாய் இருந்தால் அதையும் ஆண்மகன் உண்டு கொழுக்கிறான். பெண்ணுக்கு வாரிசாகக் கிடைக்கும் சொத்துக்களையும் குடும்பத்துள்ளே போடுகிறான். பெண் ஏமாந்தவளாக இருந்தால், அவள் நகைகளையும் வாங்கி ஏப்பம் விடுகிறான்.
பெண்ணை அனுபவிக்கிறான், பெண் கொண்டுவந்த பொருளையும் அனுபவிக்கிறான். அவள் உதவிக்கரம் நீட்டியதால் உழைப்புக்கும் வழி பெற்றான். இதற்குப் பின்னரும் பெண்ணிடம் ஏதாவது ஒன்று என்றால், ஒரே வார்த்தையை உபயோகித்து மணவிலக்கு செய்து விடுகிறான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவரிடம் உள்ள மற்றொரு நற்குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும்’. (அறிவிப்பாளர்: ஹளரத், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது. பெண்கள் இந்த நியதிக்கு மாற்றமாவர்கள் அல்ல.
கண் அழகாக இருந்தால் மூக்கு அழகாக இருக்காது. மூக்கு அழகாக இருந்தால், முடி அழகாக இருக்காது. அழகிருந்தால் அடங்கி நடக்க மாட்டாள். இரண்டும் இருந்தால் குழந்தைப்பேறு இருக்காது. அதுவும் இருந்தால் அண்டை அயலாரோடு ஒத்துப் போகின்றவளாக இருக்க மாட்டாள். குறையே அற்ற பெண் வேண்டுமென்றால் சுவனத்துக்குத்தான் செல்லவேண்டும்.
ஒரு தோழர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘யாரஸூலல்லாஹ்! எனது மனைவியின் நாவு சற்று நீளமாகிறது (அண்டை அயலாரிடம் சண்டை வளர்ப்பவளாக இருக்கிறார்)’ என்று கூறினார். அது கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை சோதிப்பதற்காக, ‘அப்படியானால் அவளை தலாக் விட்டு விடுங்களேன்!’ என்றார்கள். ‘இல்லை யாரஸூலல்லாஹ்! அவள் நிறைய குழந்தைகளைப் பெற்றுத் தந்திருக்கிறாள். என் மீதும், என் குழந்தைகளின் மீதும் அதிகப்பரிவு காட்டுகிறாள்’ எனக்கூறினார் அந்த தோழர். ‘அப்படியானால் அவளுக்கு உபதேசம் செய்யுங்கள்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள் (அறிவிப்பாளர்: ஹளரத், லகீத் பின் ஸமுரா (ரளி), நூல்: அபூதாவூது)

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என்றொரு பழமொழி வழக்கில் உண்டு. அது போன்றுதான் எல்லாக்குடும்பத்து நிலையும். அதைப் புரிந்து கொள்ளாத சிலர் சில சில்லரைக் காரணங்களுக்காகவெல்லாம் பெண்ணை மணவிலக்கு செய்து விடுகிறார்கள்.
மனைவியின் தயவினால் சம்பாதிக்க ஆரம்பித்த சிலருக்கு நாலுகாசு சேர்ந்தவுடன் வறுமையின் நேரத்தில் கரம் பிடித்த பெண் தற்போது பொறுத்தமானவளாகத் தோன்றவில்லை. தற்போதைய தன் நிலைக்கு பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும் எனக் கற்பனை செய்து கொண்டு சிலர் தனது மனைவியைத் தலாக் விட்டு விடுகின்றனர்.
அதுவும் அவளிடமிருந்த பணத்தையெல்லாம் உறிஞ்சி குடித்துவிட்டு அவளை வெறுங்கையுடன் விட்டுவிடுகிறான். ஊர் பஞ்சாயத்துக் கூடி அவனிடமிருந்து எதையாவது மீட்டு பெண்ணிடம் ஒப்படைக்கலாமென முயன்றால், உபயோகித்து உடைந்துபோன சீர் சாமான்களைத்தான் திரும்பப்பெற முடிகிறது. வரதட்சணையாக வைத்துக் கொடுத்த பணம் வராத தட்சணையாக மாறிவிடுகிறது. சட்டப்படியும் அதைத் திரும்பப்பெற உரிமையில்லை, அதனால் தலாக் விடப்பட பெண் தனது ஜீவனாமசத்துக்கும் வழியில்லாமல் ஆதரவின்றி விடப்படுகிறாள். இந்த நிலையைக் காணும் சகோதர சமயத்தவர் இஸ்லாத்தின் சட்ட நியதிகளைக் குறையுடன் நோக்குகிறார்கள்.
இந்த நிலையைப் போக்குவதற்கு ஜமா அத்தார்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவன் ஒருலட்சம் ரூபாயை வரதட்சணையாகப் பெற்றால் ஒருலட்சத்து ஆயிரம் ரூபாயை மஹராக ஊர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவன் பெண்ணை தலாக் விட்டுவிட்டால் அந்த ஒருலட்சத்து ஆயிரத்தையும் சட்டப்படி அவனிடமிருந்து வசூல் செய்து விடலாம். கார், பங்களா, மொபெட் போன்று பொருட்களை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டால், அந்தப்பொருட்களின் விலைமதிப்புடன் 1000 ரூபாய் சேர்த்து கடிதப்புத்தகத்தில் மஹராகப் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய ஏற்பாடு செய்தால் பெண்ணின் கண்ணீரைத் துடைக்க முடியும்.
சோரம்போன பெண்!
தலாக் நிகழ்வதற்கு பெண்கள் சோரம் போய்விடுவது காரணமாக அமையலாம். ஆனால், சில பெண்கள் சோரம் போவதற்கு ஆண்மகனே காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தனது பெண்மக்களை மிகவும் பாதுகாப்பாகவே வளர்க்கிறார்கள். ஒருவனிடம் கைபிடித்துக் கொடுக்கும்வரை எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று கண்காணிப்பாகவே இருக்கிறார்கள். ஜன்னலில் நிற்காதே! ஆடவர்களுடன் பேசாதே! என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து பாதுகாத்து பத்தினித்தனமாகவே ஒரு ஆண்மகன்கையில் ஒப்படைக்கிறார்கள்.
ஆனால், அவன் மணமுடித்த புதிதில் அவள் மிகவும் நாகரீகம் தெரியாதவளாக இருக்கிறாள் என்று கூறி கடிந்து கொள்கிறான். அவள் நாணப்படுவதை தடுக்கிறான். தனது நண்பர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறான். தன்னுடன் வெளியில் வரும்போது வெளியுலகிற்கு அவள் அழகாகக் காட்சி தரவேண்டுமென வற்புறுத்துகிறான்.
இதனால் அவள் சோரம் போய்விடுகிறாள். அவள் சோரம் போனதற்கு அவன் காரணமாக இருந்தால், அவன் தலாக் விடும் முன் சற்று யோசிக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றில் இறைவனுக்கு கோபத்தை தரக்கூடியது தலாக் என்பதையெல்லாம் அவன் சிந்தனை செய்ய வேண்டும். ஆம்! பெண்பாவம் பொல்லாதது.
நன்றி: குர்ஆனின் குரல்

No comments:

Post a Comment