அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Saturday, January 29, 2011

‘ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது’

எம்.ஏ. முஹம்மது அலீ
[ ‘மனிதன் நாட்டத்தில் எதுவும் நடப்பதில்லை - இறைவன் நாட்டமின்றி ஓர் அணுவும் அசைவதில்லை’. இதுதான் ஆன்மீகவாதியின் நம்பிக்கையாக இருக்க முடியும், அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராக இருப்பினும் சரியே.
உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது, உச்சரிக்கவும் கூடாது.]

‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூ லுல்லாஹி’ கலிமாவை மொழிந்து ஏறறுக்கொண்டுள்ள ஒரு முஸ்லீம் - முஃமினுடைய உதடுகள் எக் காரணத்தைக் கொண்டும் உச்சரிக்கக் கூடாத ஒரு வார்தை ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’.
மனிதனின் பரம எதிரியான, ஷைத்தான் கூட இவ்வார்த்தையை உச்சரிக்கத் தயங்குவான். ஏனெனில் அவனுக்குக்கூட தன்னுடைய வரம்பு எது என்று ஓரளவுக்காவது புரியும். ஆனால் இந்த நன்றிகெட்ட மனிதன் தன்னைப்பற்றி இறைவன் அறிவித்துக் கொடுக்காத எதையும் தெரிந்து கொள்ள ஆற்றல் இல்லாத நிலையில் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்வதோ உச்சரிப்பதோ வரம்பு மீறுதலின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

இன்று நேற்றல்ல நெடுங்காலமாக மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள்; இவ்வார்த்தையை மேடைகளில் முழங்குவதை கண்டு கொண்டுதான் வருகிறோம். சினிமாவிலும்,
ஊடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் கூட இவ்வார்தையை அடிக்கடி உச்சரிப்பதை அறிய முடிகின்ற போது இது எந்த அளவுக்கு இளம் தலைமுறையினரின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களது இறைநம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதில் பெரிய வினோதம் என்னவென்றால் இறைநம்பிக்கையற்ற நாத்திகர்களின் வாயில் இவ்வார்த்தை வருவதில்லை. ஏனெனில் அவர்கள் இறைவனே இல்லையென்று வாதிடக்கூடியவர்கள். ஆனால் இறைநம்பிக்கையுள்ள மற்ற சகோதரர்கள்கூட சர்வ சாதாரணமாக இவ்வார்த்தையை உச்சரிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு இறைவனின் ஆற்றலில் நம்பிக்கையில்லையா?
ஆன்மீகவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பிரபலமான நடிகர்கூட சினிமாவுக்காக மட்டுமின்றி மேடையில்கூட அடிக்கடி இவ்வார்த்தையை பிரயோகம் செய்வது அவர் ஒரு பொய்யான ஆன்மீகவாதி என்பதை பறைசாற்றுகிறது என்பதை அவர் உணர வேண்டாமா? உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது.
இவ்வார்த்தையைச் சொல்வதற்கான தகுதி எந்த மனிதனுக்காவது உண்டா என்றால் இல்லை என்பதுதான் ஆணித்தரமான பதில்.
ஒரு அர்ப்பமான கொசுவுக்குக்கூட அசைந்து கொடுக்கக்கூடிய பலகீனமானவனாகத்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இறைவன் தனது திருமறையில் இந்த உலகைப்பற்றிக் குறிப்பிடும்போது அவனது பார்வையில் இவ்வுலகம் ஒரு கொசுவின் இறக்கைக்குக்கூட பொருமானமில்லை என்று விளிக்கின்றான். இந்நிலையில் ஏக வல்லமைப் படைத்த ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ (நவூதுபில்லாஹ்) என்று எவரேனும் சொல்வாரானால் அவர் அறிவிலியாகத்தான் இருக்க முடியுமே தவிர அறிவாளியாக அல்ல.
ஏனெனில் இதை சொல்லக்கூடியவன் அகங்கார மிக்கவனாகவும், வரம்பு மீறியவனாகவும் தான் இனங்காணப்படுவான். தன்னையே இறைவன் என்று சொல்லிக்கொண்ட ஃபிர்அவ்னுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அதிகமில்லை.
சரி இது ஒருபுறம் இருக்கட்டும். திருக்குர்ஆனில் இறைவன் ‘இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்’ என்று சொல்வதை கடமையாக்கி வைத்திருக்கும்போது அதற்கு நேர்மாறான ஒரு வார்த்தையை விளையாட்டுக்குக்கூட சொல்வது கூடாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் கூறுவோம்
இதன் பொருள் "அல்லாஹ் நாடினால்" என்பதாகும். இதைச்சொல்வது குறித்து குர்ஆனில் 18:23,24, 2:70, 12:99, 18:69, 28:27, 37:102, 48:27 ஆகிய ஏழு இடங்களில் வருகின்றன.
மக்கா குரைஷிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டு திணற வைத்தனர். அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்கமாக சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளிடம் ஆலோசனை கலந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகி குகைவாசிகள்பற்றி வினவினர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாது "நாளை இதற்கு பதில் கூறுகிறேன்" என்று மறுமொழி பகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாதன் காரணமாக இறைவனிடமிருந்து அவர்களுக்கு இரண்டு வார காலமாக வஹீ வருவது நின்று விட்டது.
வாக்களித்தபடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அடுத்தநாள் பதில்கூறாததைக் கண்ட குறைஷகள் அவர்களை பொய்யெரென இழித்துரைக்கத் துவங்கினர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ கண்ணீர் மல்க தம் பாவம் பொறுத்தருள மண்டாடினர். அப்பொழுது இறைவனிடமிருந்து
"நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்பவனாக இருக்கிறேன் என்று யாதொரு வாக்குறுதியும் அளிக்க வேண்டாம் என்றும் அல்லாஹ் நாடுவதையல்லாது இன்னும் நீர் எதையேனும் மறந்தீரானால் உம் இரட்சகனை நினைவு கொள்வீராக! (18:23,24) என்றும் அருள் எச்சரிக்கை வந்தது. அத்துடன் குகைவாசிகள் பற்றிய சில விவரங்களையும் இறைவன் கூறினான்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இந்த எச்சரிக்கை என்றால் நம்முடைய கதி என்ன? சிந்திக்க வேண்டாமா?
ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணை சிறியதாயினும், பெரிய தாயினும். அதனை அளிக்கு முன் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறினால், அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கடமைப் பட்டவராகிறார். மேலும் அல்லாஹ், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றப் போதுமானவன்.
எனவே ஒருவர் மற்றவருக்கு வாக்குதி வழங்குமுன் "இன்ஷா அல்லாஹ்" எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும். இன்ஷா அல்லாஹ் எனக்கூறுவதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பேற் படுகிறது.
உலகில் அனைத்துச் செயலகளும், இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன. மனித வாழ்வின் அனைத்துப் போக்குகளும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும். இந்நிலையில் என்று விளையாட்டுக்குக்கூட ‘ஆண்டவனே வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ சொல்வது மாபெரும் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
‘மனிதன் நாட்டத்தில் எதுவும் நடப்பதில்லை - இறைவன் நாட்டமின்றி ஓர் அணுவும் அசைவதில்லை’. இதுதான் ஆன்மீகவாதியின் நம்பிக்கையாக இருக்க முடியும், அவர் எந்த மதத்தைச்சார்ந்தவராக இருப்பினும் சரியே.
மீண்டும் நினைவு படுத்துகிறோம்: உண்மையான ஆன்மீகவாதிகளின் உதடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற வரம்பு மீறிய வார்த்தைகளை உச்சரிக்காது, உச்சரிக்கவும் கூடாது. சிந்திப்போம் சிர்பெறுவோம்.
 

'கோணலை'க் கவனிக்காதீர்கள்!

'பெண்களிடம் நீங்கள் மிகவும் மென்மையாக நடந்து கொள்ளுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கோணலான எலும்பினால் படைக்கப்பட்டுள்ளார்கள்'' (நூல்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு கூறிய கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கோணல் எப்படிப் பிரதிபலிக்கும் என்பதையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தினார்கள்.

உங்களில் ஒருவர் தன் மனைவிக்காகக் காலமெல்லாம் கடுமையாக உழைத்துக் கஷ்டபட்டுக் காப்பாற்றி வருவார். ஆனால் ஒரு தடவை அவளது கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால், உடனே அவள் சொல்லிவிடுவாள் ‘உனக்கு வாழ்க்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்’ என்று! (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு தனது நாவினால் கணவனைப் புண்படுத்துவது பெண்களின் இயல்பிலுள்ள முக்கியமான கோணலாகும். அந்தக் கோணலை ஆண்கள் புரிந்து கொண்டு அவர்களை மன்னித்து மறந்து அன்பாக அரவனைத்து வாழ வேண்டுமே தவிர, ‘அட, நன்றி கெட்டவளே! உனக்கு நான் என்னவெல்லாம் தந்துள்ளேன். இந்த அற்பக் காரியத்துக்காக இப்படிச் சொல்லி விட்டாயே!’ என்று கூறி அவளைத் திட்டவோ, ஒதுக்கிவிடவோ கூடாது. மாறாக இவள் மட்டுமல்ல, எந்தப் பெண்ணாக இருந்தாலும் இப்படிப் பேசத்தான் செய்வாள் என்று அமைதியுடன் அடுத்த வேலையைக் கவனிக்க வேண்டும் ஆண்கள்.
நிமிர்த்த முடியுமா?
அவ்வாறு செய்யாமல் நம்மை இப்படிச் சொல்லிலிட்டாளே என்று ஆத்திரப்பட்டால், அந்தக் கோணலை நிமிர்த்தலாம் என்று முயன்றால் அது நிமிராது, மாறாக ஒடிந்துவிடும். அதாவது வாழ்க்கை முறிந்து விவாவகரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எனவே பெண்களின் இதுபோன்ற பேச்சுக்களால் ஆண்கள் கோபம் கொண்டு விடக்கூடாது. இதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் ஒரு முன்மாதிரியைக் காணலாம்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாபெரும் மேதாவியாகவும், அறிவுக்கலஞ்சியமாகவும் திகழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்கள் ஒரு தடவை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பிணங்கிக் கொண்டார்கள்.
இருவருக்கும் மத்தியில் அப்பொழுது அங்கு வந்த அவர்களின் தந்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உற்ற தோழருமான அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘என்ன? ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் மத்தியில் ஏதேனும் பிரச்சனையா?’ என்று கேட்க, ‘ஆம்!’ என்று தலையசைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆயிஷாவே! உன் தந்தையே வந்து விட்டார். பிரச்சனையை நீ சொல்கிறாயா அல்லது நானே சொல்லட்டுமா?’ என்று தம் அன்பு மனைவிடம் கேட்டார்கள்.
சற்றும் கோபம் தனியாத அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சட்டென்று சொன்னார்கள், ‘நீங்களே சொல்லுங்கள், ஆனால் உள்ளதைத்தான் சொல்ல வேண்டும்.’ (அதாவது நடந்ததை அப்படியே சொல்ல வேண்டும். கூடுதல் குறைவு கூடாது).
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவர்களின் தந்தை அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடும் கோபமுற்றார்கள். ‘என்ன சொன்னாய்? உள்ளதைத்தான் சொல்ல வேண்டும் என்றா...? யாரைப்பார்த்துச் சொல்கிறோம் இந்த வார்த்தையை என்ற உணர்வுகூட இல்லாத அளவுக்கு?! உள்ளதைத்தவிர எதையும் வாழ்நாள் முழுக்க சொல்லியிராதவர் என்று எதிரிகளும் ஒப்புக்கொண்டுள்ள உண்மையை மறந்துவிடும் அளவுக்கு உனக்கு கோபம் கண்ணை மறைத்து விட்டதோ?’ என்று கடிந்து கொண்டு மகளை அடிக்கக் கையை ஓங்கினார்கள்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன் அன்புக் கணவரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள். இப்போது ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டே தம் மனைவியை அரவனைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
சற்றும் கோபமின்றி, ‘என்ன அபூபக்கரே! எங்களுக்கு மத்தியில் சண்டையைத் தீர்த்து வைப்பீர் என்று உம்மிடம் சொன்னால் நீர் சண்டையை அதிகமாக்கி விடுவீர் போலிருக்கிறதே!’ என்று நகைச்சுவையுடன் சொல்ல ‘இனிமேல் நபிகளாருடன் இப்படி நடந்து கொண்டால் ... அவ்வளவுதான்!’ என்று எச்சரித்துவிட்டுப் போனார்கள் ஆபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (நூல்: மிஷ்காத்)
அன்புக் குறைவு என்று அர்த்தமல்ல
இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பெண்கள் எவ்வளவுதான் உயர்ந்த அந்தஸ்திலும், அறிவாற்றலிலும் மிகைத்திருந்தாலும், தம் கணவரை உயிரைவிட அதிகமாக நேசித்தாலும், கோபம் வருகின்றபோது முன்பின் யோசிக்காமல் சில வார்த்தைகளைச் சொல்லி விடுவார்கள். அது பெண்மைக்கே உரிய பலவீனத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொண்டு அதை மன்னித்துவிட வேண்டும். தவிர, அதற்கு முக்கியத்துவம் அளிப்பதோ, அந்தச் சொற்களைச் சொல்லிவிட்டதன் காரணமாக அவள் தன்னை வெறுக்கிறாள் என்று முடிவு செய்வதோ, அதற்காக வேறு நடவடிக்கைகளில் இறங்குவதோ ஆண்களுக்கு – ஆண்மைக்கு அழகல்ல.
எனவே பெண்மையின் கோணலினால் தோன்றும் முக்கியப் பிரச்சனையான அவர்களின் தவறான பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. மாறாக நம்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பும், பாசமும்தான் நமது கண் முன்னால் எப்போதும் நின்று, நீர்க்குமிழி போல் அவ்வப்போது பொங்கியெழும் கோபத்தை சமாளித்து இல்லறத்தை மகிழ்ச்சியுடன் கொண்டுசெல்ல வேண்டியது ஆண்களின் பொருப்பாகும்.
Posted by: Abu Safiyah
 

Friday, January 7, 2011

கண் மூடிக் கொண்ட பின்னால்...

அபூ சுமையா, நாகை .
கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்". சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும். வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!..
என்ன கேவலம்!
சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள மாட்டான் தான். பொறுமையைப் கைக் கொண்டு பணியைத் தொடரத்தான் பணிக்கிறது இஸ்லாம். அதற்காக இப்படியா? அதுவும் நெய்ச்சோறும் குருமாவும்! தூர தொலைவிலிருந்து வரும் உற்றார் உறவினர்களுக்காகத்தான் இந்த ஏற்பாடு எனச் சப்பைக் கட்டு கட்டுவார்கள். சரி! அவர்கள் எளிய சோறு சாப்பிட மாட்டார்களா? பிரியானிக்காகத்தான் புறப்பட்டு வந்தார்களா? எளிய இல்லங்களைக்கூட இந்தப் பாழும் வழக்கம் விட்டு வைக்கவில்லையே? மார்க்கத்தின் பெயரால் ஒரு கடமையைப் போலன்றோ ஆக்கி விட்டார்கள்.

இதுமட்டுமா? கண் மூடிக் கொண்ட பின்னர் இன்னும் எத்தனை எத்தனை வேடிக்கைகள். சாவின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்குகள்தான் எத்தனை? கபன் தபனிட்டு ஜனாஸா வெளியாகும். ஜனாஸாவைத் தூக்கிய மறுகணமே, உடலில் தூசு விழக்கூடாது என்ற நோக்கில் உடல் கிடத்தப்பட்ட இடத்தின் மேல் பந்தல் போல் கட்டப்பட்டிருந்த துணியை அவசரமாய் அகற்றுவார்கள். ஏன் அடக்கம் செய்து விட்டு வந்து நிதானமாக எடுத்தால் ஆகாதா?
ஜனாஸா வீட்டை விட்டு வெளியேறும் அடுத்தகணமே ஒருவர் கூரையிலிருக்கும் ஓடுகளில் ஒன்றை உருவி எடுத்துத் தரையில் போட்டு விடுவார். இது யார் சொல்லித் தந்தது? இரசூல்நபிகளா. ஓட்டை உருவி விடுகின்றீர்கள், சரி; கான்கிரீட் கட்டிடம் என்றால் எதை உருவி இச்சடங்கை நிறைவேற்றுவதாம்?
இன்னும் ஒன்று! இறக்கும் போது கூட கிழமை பார்த்துதான் இறக்க வேண்டும். செவ்வாய், சனிக் கிழமைகளில் இறந்தால் தொலைந்தது. இன்னொரு சாவு தொடரும். ஆனால் முதல் சாவிலேயே புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் பிழைத்தீர்கள். அதாவது ஒரு கோழியையும் ஜனாஸாவுடன் சேர்த்து வீட்டைவிட்டு வெளியேற்றிட வேண்டும். எத்தனை பெரிய சண்டாளத்தனம் இது. பகுத்தறிவு மார்க்கத்தில் இப்படியொரு குருட்டுத்தனம். எனக்கு இதைக் கண்ட மாத்திரத்திலேயே ஒரு சிறு பொறி தட்டியது. நாயுடு இன நண்பரான சீனிவாசனிடமும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனபாலிடமும் கேட்டேன் – அவர்களது மதச் சடங்குகளைப் பற்றி. திடுக்கிடத்தான் முடிந்தது. ஆம். செவ்வாய், சனிக்கிழமைச் சாவுகளுக்கு சேவலோ கோழியோ பாடையிற் கட்டி அனுப்பும் பழக்கம் எங்களுடையதே எனச் சொந்தம் கொண்டாடினர் அவ்விருவரும். எனக்குப் புரிந்து போனது – நம்மைத் தொற்றிய நோயின் மூலம் எதுவென்று!
ஜனாஸாவைக் குளிப்பாட்டும்போது அதற்காக ஆள் தேடும் அவலம் இருக்கிறதே, அல்லாஹு அக்பர்! சொல்லி மாளாது. உயிருடனிருக்கையில் ஒட்டி உறவாடியவர்களெல்லாம் ஒதுங்கி நிற்பார்கள். பெற்ற மக்களே நெருங்கி வந்த சுத்தப்படுத்தப் பயப்படும் இழி நிலை. எல்லாவற்றிற்கும் ‘மோதினார்’தான் ஈடுகொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்தானே சொற்ப ஊதியம் பெறும் இழிச்சவாயர்! பெருமானார் காலத்தில் பிலால் ரளியல்லாஹு அன்ஹு தான் இந்தக் காரியமாற்றியதாக நினைவு போலும்.

ஜனாஸா வீட்டைவிட்டு வெளியேறுகிறதா? கூடவே உப்பு, அரிசி, முட்டை சில பகுதிகளில் வாழைப்பழக்குலை – தட்டில் பரப்பி ஊர்வலம் போக வேண்டும். இந்து நண்பர்கள்தான் வாய்க்கரிசி எடுத்துச் செல்வார்கள். உப்பும் கடலையும் கலந்து இறைத்துக் கொண்டே போவார்கள். வல்ல அல்லாஹ் சொல்லாததை, வள்ளல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இயம்பாததை – அதுவும் நம் கண் முன்னரே அல்லாஹ் அல்லாதவற்றை நம்புவோரின் பழக்கக வழக்கங்களைப் பின்பற்றுகிறோமே இது நியாயந்தானா?
நியாயமாகச் செய்யப்பட வேண்டிய காரியங்கள் தான் எவை என்கிறீர்களா? இறந்து போனவர்களின் இல்லத்தில் சமையல் செய்யப்படுவதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்துள்ளதுடன் அண்டை வீட்டாரே, உணவு தயாரித்து அளிக்க வேண்டுமேன வலியுறுத்தியுள்ளது இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கது. ஜனாஸாவைக் குளிப்பாட்டியபின் நெஞ்சில் பல கூட்டு மணத்தூளைக் கொட்டி, அல்லாஹ் முஹம்மது என எழுதுவதும் மேற்பட்டி பிரிப்பதும் ஓடு எடுப்பதும் சேவற்கொழி அனுப்புவதும் அண்ணலார் காட்டிய வழியில்லை; அதைப் பிடித்துக் கொண்டு நிற்பது அழகும் இல்லை!
இவ்வளவு அனாச்சாரங்களைச் சாவின் பெயரால் கடைப்பிடிக்கிறோமே, மிக முக்கியமான ஜனாஸாத் தொழுகையில் எத்தனை பேர் கலந்து கொள்கிறோம்? ஜனாஸாத் தொழுகை ஒருபுறம் நடக்கும்; மூலைக்கு மூலை கூடி நின்று அரசியல் முதல் சினிமா வரை அலசியாகும். ஜனாஸாவை அமைதியாகப் பின்பற்றுவதும் தொழுகையை நிறைவேற்றுவதும்தானே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் அருளிய மொழி.
கண்மூடிக் கொண்ட பின்னர், கண்மூடித்தனமாய்ப் பின்பற்றும் செயல்களைக் களைந்து வாழ்விலும் சாவிலும் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி சத்திய இஸ்லாத்தை நிலை நாட்டுவோம்.

جَزَاكَ اللَّهُ خَيْرًا  அந்நஜாத்: ஆகஸ்ட், 1986

ஆலோசனையின் அவசியம்

மவ்லவி, மு.ஷேக் முஹ்யித்தீன், உடன்குடி
இவ்வுலகில் எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்து அதில மனித இனத்தை மேன்மையாக்கிய இறைவன் மனிதன் வழி தவறாதிருக்க சில வழிமுறைகளையும் தானே கற்றுத்தருவதோடு, தமது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அதன்படி நடக்கச்செய்து அவ்வழிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றதுதான் என்பதை உறுதி செய்கிறான்.

இவ்வரிசையில் இடம்பிடிப்பதுதான் ஒருவருக்கொருவர் ‘ஆலோசனை’ செய்து கொள்ளல் வேண்டும் என்ற நடைமுறை. இதன்மூலம் பற்பல இடையூறுகள் தவிர்க்கப்படுகின்றன. கருத்துவேற்றுமை ஏற்படாமலிருக்கின்றன. எக்காரியத்தையும் இலகுவாக சாதிக்க ஏதுவாகின்றது. இதுபோன்ற மேலும் பல நற்பயன்களும் இதில் புதையுண்டு கிடக்கின்றன.
அல்லாஹ்வின் ஆலோசனை
எக்காரியமாக இருந்தாலும்சரி, ஆலோசனையின் பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நியதி நேற்றின்று உருவானதல்ல. மனித அறிவினால் உருவாக்கப்பட்டதும் அல்ல. இத்தரணியையும், தரணிவாழ் மக்களையும் படைத்து நிர்வாகம் செய்கின்ற அல்லாஹ்வே எதுவாக இருந்தாலும் ஆலோசனையுடன் செயல்படுத்து என்று கற்றுத்தருவதற்காக தானும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அனைத்தையும் படைத்து பரிபாளிக்கக்கூடிய இறைவன்; யாரிடம் போய் ஆலோசனை கேட்பது? ஆலோசனைக் கேட்க வேண்டிய அவசியம்தான் என்ன? ஆனால் ஆலோசனை கலக்கின்றான்.

எதற்காக?
நாமும் ஆலோசனை செய்து காரியமாற்றவேண்டும் என்கின்ற முக்கியமான பண்பை விளங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக!
இறைவன் திருமறையில் இரண்டாவது அத்தியாயமான ‘அல்-பகரா’ வின் 30 ஆவது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்: இறைவன் இவ்வையகத்தைப் படைத்து அதில் தனது பிரதிநிதியாக மனித வர்க்கத்தை உருவாக்கி நினைத்தபோது 'நான் பூமியிலே எனது பிரதிநிதிகளைப் படைக்கப் போகின்றேன்’ என மலக்கு(வானவர்)களிடம் கூறினான். அவ்வானவர்களின் பதில் வேறொன்றாக இருந்த போதிலும், இறைவன் மலக்குகளுக்கு தெரிவித்ததிலிருந்து கலந்தாலோசிக்கும் பண்பை நமக்குக் கற்பிக்கிறான் என்பதை சிந்தித்துணர வேண்டாமா? 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலோசனை 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் ஆலோசனை செய்வதற்கு ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.

பத்ருகளம் வெற்றியடைந்த கையோடு களிப்போடு அனைவரும் அமர்ந்திருக்க பிடிபட்ட கைதிகள் குறித்து தமது மூத்த தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஆலோசனை செய்த வரலாற்றுக் குறிப்பை எவர்தான் மறக்க முடியும்?
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதமொன்று வரைகிறார்கள். அதில் ‘நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் விஷயங்களில் கலந்தாலோசித்திருக்கிறார்கள். எனவே அதையே தாங்களும் பின்பற்றுங்கள்.’ (நூல்: தப்ரானி) என்று செய்தி அனுப்புகிறார்கள்.
இதற்கு மேலும் வலுவுhட்டும் ஆதார சம்பவமாக அகழ்போரை நினைவு படுத்திப் பார்க்கலாம். போர் தந்திரங்களில் அகழ் தோண்டும் பழக்கம் அரபிகளிடத்தில் இல்லாத நிலையில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தாமே முன்னின்று அகழ் தோண்டுவதற்கு உதவி செய்து மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனை குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகள் ஆலோசனையின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்த முடிவில் ஸஹாபாக்கள் திருப்தி கொள்ளாது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியபோது உம்முல் முஃமினீனான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட்டு அதற்கு தீர்வு கண்டார்கள் என்பது பெண்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 33 ஆவது வசனத்தில் குடும்பவியலைப் பற்றி பேசுகிற இறைவன் கணவனும் மனைவியும் இனிமேல் இணைந்து ஒற்றமையாக வாழ முடியாத வண்ணம் பிணக்குகள் அதிகமானால் கணவன் சார்பாக ஒரு நீதவானையும், மனைவியின் சார்பாக மற்றொரு நீதமானவரையும் கலந்தாலோசித்து இருவரும் இணைந்திருப்பதே நல்லது எனில் இருவரையும் இணைத்து வைப்பார்கள் என்று கருத்து கூறுகிறான்.
இங்கே இருவரின் சார்பாகவும் பிரதிநிதிகள் வரவேண்டும் என்பதிலிருந்தே கலந்தாலோசிப்பதின் அவசியம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆலோசனை பெறப்படும் ஒவ்வொருவருமே தமது கருத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நப்பாசைக் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் நினைவுகூற இந்த இடம் பொறுத்தமானதே!
சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும், ஏன் ...? தனிப்பட்ட சிறு சிறு விஷயங்களில்கூட இந்த யுக்தியைக் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கையருகில் என்று சொல்லவும் வேண்டுமோ!

காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?

அபூ ஸஃபிய்யாஹ்
[ உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]
காதல் என்றால் என்ன? 
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.
பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.

காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பaதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.

ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா...
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.

குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல்
உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான். முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!''