அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Monday, December 12, 2011

அழகை நேசிக்கும் அல்லாஹ்


     அழகை நேசிக்கும் அல்லாஹ்    

உடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான ஆபத்தானவை!

அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானவை. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானவை. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதஇல் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 147)


Thursday, December 8, 2011

செருப்பு - நபிமார்களின் அணிகலன்!




    செருப்பு - நபிமார்களின் அணிகலன் !    

உச்சியிலிருந்து கரண்டைக்காலுக்கு மேல்வரை துணிகளால் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஒருவன் கால்களுக்கு மட்டும் சற்று வித்தியாசமானதை செருப்பாக அணிந்து கொள்கிறான். அதை அணிந்தே பழக்கப்பட்டவர்கள் அதை அணியாமல் வெளியில் செல்வதை விரும்ப மாட்டார்கள். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் அதன் அவசியத்தை உணர்ந்தே இருக்கிறார்கள். கோடைக்கால வெயிலில் அதன் உதவி இல்லாவிட்டால் எங்கும் போக முடியாது.

கல், கண்ணாடித்துண்டு, முள்களிலிருந்தும், அறுவறுப்பானவைகளிலிருந்தும், நஞ்சுமிக்க விஷப்பூச்சிகளிலிருந்தும் இதன் மூலம் பாதுகாப்புப் பெறுகிறோம். நிராயுதபாணியாக இருக்கும்போது ஒன்றை அடிக்கும் ஆயுதமாகவும் கூட அது பயன்படுகிறது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாகக்கூட அது பயன்படுகிறது என்பதை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ‘புஷ்’ஷின் மீது வீசப்பட்ட செருப்பின் பிரசித்தம் உலகம் அறிந்த ஒன்றாக இருப்பதை எவர்தான் மறக்க முடியும்!

Monday, November 21, 2011

வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!

வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!

(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)


அல்லாஹ்வையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன்: 17:23)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதில் கஞ்சத்தனம் கூடவே கூடாது!

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான். பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன்: 47:38)

அல்லாஹ்வை வணங்குவதில் ஏற்படும் கஷ்டங்களை சகித்து பொறுமையுடன் இருத்தல்!

அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும், பூமியையும் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 35:1)

பிரார்த்தனை என்பது அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே!

நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்" (என்று இப்றாஹீம் சொன்னார்). (அல்குர்ஆன்: 19:48)

பெருமை பொருந்திய இறுதி இறை வேதம்!

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 85:21-)

மன்னிப்பே இல்லாத இணைவைப்பு எனும் பெரும்பாவம்!

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48).

Tuesday, November 8, 2011

மீல் மேக்கர்-மஷ்ரூம் பிரியாணி

மஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோசிச்சு மீல் மேக்கரையும் மஷ்ரூமையும் சேர்த்து பிரியாணி செய்வோம்னு செய்துபார்த்தேன். சூப்பரா இருந்துது காம்பினேஷன்! :) பிரியாணி- காளான்-சோயா எல்லாமே என்னவருக்கு மிகவும் பிடிச்சது, ஸோ, இந்தக் காம்பினேஷன் அடிக்கடி ரிபீட் ஆக ஆரம்பிச்சிடுச்சு எங்க வீட்டில்!

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி -11/4கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
தக்காளி(சிறியது)-1
தேங்காய்ப்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய் + நெய் -4டேபிள்ஸ்பூன்

பட்டன் மஷ்ரூம்-6
மீல் மேக்கர்-12 உருண்டைகள்
புதினா,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-கொஞ்சம்
பிரியாணி மசாலா-11/2டேபிள்ஸ்பூன்
தயிர்-2டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள்-1டீஸ்பூன்
உப்பு

பொடிக்க
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு-5பல்
பட்டை-3" துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1
பிரியாணி இலை-1

செய்முறை

அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.

மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.

பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கொறகொறப்பாகப் பொடித்துவைக்கவும்.

காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம்-மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

தேங்காய்ப்பால் பவுடரையும் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 11/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடவும்.

தீயின் அளவை மீடியமுக்கு அதிகரித்து ஏழு நிமிடங்களில் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கவும். (விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, ஏழு நிமிடத்தில் இறக்கி வைத்தால் ப்ரெஷர் குறைந்து குக்கரை திறக்கையில் பிரியாணி பதமாக வெந்திருக்கும்.) .



கமகம பிரியாணி ரெடி! அப்புறம் என்ன..தயிர் பச்சடியோ, மிர்ச்சி கா சாலன் அல்லது எண்ணெய்க் கத்திரிக்காயோ சைட்ல வைச்சு ஒரு புடி புடிக்க வேண்டியதுதேன்! வாங்க சாப்பிடலாம்! :).


Friday, October 28, 2011

ஹஜ்ஜுக் கடமையும் அதன் சிறப்பும்.

769. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!'' என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.

770. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தம் வாகனத்தில் அமர்ந்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சரியாக நின்றபோது இஹ்ராம் அணிந்து தல்பியாக் கூறியதை பார்த்தேன்.

வாகனத்தின் மீதமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல்.

771. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார். அனஸ்(ரலி) ஒட்டகச் சிவிகை அமைக்காமல் ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். (அவர் ஒட்டகச் சிவிகை அமைக்காததற்குக் கஞ்சத்தனம் காரணமில்லை) ஏனெனில், அவர் கஞ்சராக இருந்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகச் சிவிகை அமைக்காமல்) ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்ததாகவும் அனஸ்(ரலி) (எங்களுக்கு) அறிவித்தார்கள்.

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு.

772. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்'' என்றார்கள்.

773. ''உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மக்காவாசிகள் ஹஜ், உம்ராவுக்காக எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்?

774. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாªலையும் யமன் 'வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள். தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

775. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர்(ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார்.

ஷஜரா எனும் பாதை வழியாக (ஹஜ்ஜுக்கு) நபி(ஸல்) அவர்கள் செல்லல்.

776. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும்வரை அங்கேயே தங்குவார்கள்.

அகீக் (எனும் பள்ளத்தாக்கு) அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

777. உமர்(ரலி) அறிவித்தார். ''என்னுடைய இறைவனிடத்திலிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து 'இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்து விட்டதாக மொழிவீராக!' எனக் கட்டளையிட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூறக் கேட்டேன்.

778. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) 'நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்'' என்று (வானவரால்) கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போல் இப்னு உமரும் அங்கேயே தம் ஒட்டகத்தை உட்கார வைப்பார். அவரின் மகன் ஸாலிமும் அவ்வாறே செய்வார். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல் வாதியிலுள்ள பள்ளி வாசலின் கீழ்ப்புறத்தில் சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவிலுள்ளது என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.

(இஹ்ராம் அணியும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) நறுமணமிருந்தால் மூன்று முறை கழுவுதல்.

779. யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வந்தது. உமர்(ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் 'உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!'' என்று கூறினார்கள். ''மும்முறை கழுவச் சொன்னது நன்கு சுத்தப்படுத்தவா?' என்று (அறிவிப்பாளரான) அதா(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் 'ஆம்!'' என்றார்'' என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.


இஹ்ராம் அணியும்போது நறுமணம் பூசுவதும் இஹ்ராம் அணிய நாடும்போது அணிய வேண்டிய ஆடையும் தலைக்கு எண்ணெய் தடவுவதும் தலை வாருவதும்.

780. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.

(தலை முடி காற்றில் பறக்காமலிருக்கக்) களிம்பைத் தடவி இஹ்ராம் அணிவது.

781. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூறியதைக் கேட்டேன்.

துல்ஹுலைஃபாவின் பள்ளியில் இஹ்ராம் அணிவது.

782. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை.

ஹஜ்ஜின்போது சவாரி செய்வதும் தம் வாகனத்தில் பிறரை ஏற்றிச் செல்வதும்.

783. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களோடு வாகனத்தின் பின் அமர்ந்து அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை சென்றார். பிறகு ஃபழ்ல்(ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை சென்றார். 'நபி(ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாவை நிறுத்தவில்லை' என இவ்விருவருமே கூறினார்கள்.

இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டி, மேல் துண்டு போன்றவற்றை அணிதல்.

784. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எண்ணெய் தடவித் தலைசீவி வேட்டியும் துண்டும் அணிந்து தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து (இறுதி ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல் மீது ஒட்டிக் கொள்ளும் அளவு குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி வேட்டி, துண்டு அணிவதைத் தடுக்கவில்லை - துல்ஹுலைஃபாவிற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தம் வாகனத்தில் ஏறியமர்ந்து பய்தா எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) தம் ஒட்டகத்தில் அடையாளமாகச் சிலவற்றைத் தொங்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாள்களின் மீதமிருக்கும்போது நடந்தது. துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்றடைந்தபோது கஃபாவை வலம் வந்து ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்தைத் தம்மோடு கொண்டு வந்ததனால், (தலை முடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்த நிலையில் மக்காவின் மேற்பகுதி ஹஜுன் எனும் மலையில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவை வலம் வந்தவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவிற்கு வந்தார்கள். இதற்கு இடையில் கஅபாவை நெருங்கவில்லை. தம் தோழர்களுக்குக் கஅபாவை வலம் வரவும் ஸஃபா, மர்வாவில் ஓடவும், பிறகு தலை முடியைக் குறைக்கவும் இஹ்ராமிலிருந்து விடுபடவும் கட்டளையிட்டார்கள். இது தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டு வராதவர்களுக்குச் சொல்லப்பட்டதாகும். இவர்களில் மனைவியோடு வந்தவர்கள் உடலுறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் அணிவது ஹலாலாகும்.

தல்பியா கூறுதல்.

785. அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவித்தார். ''இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.'' இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

இஹ்ராம் அணிவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலே அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர், கூறுவது.

786. அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.

கிப்லாவை முன்னோக்கித் தல்பியா கூறுவது.

787. நாபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) துல்ஹுலைஃபாவில் ஸுப்ஹுத் தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அவரும் புறப்படுவார். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார். பின்னர் தல்பியா கூறிக் கொண்டேயிருப்பார். பிறகு ஃதூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்.

இஹ்ராம் அணிந்தவர் பள்ளத்தாக்கில் இறங்கும்போது தல்பியா கூறுதல்.

788. முஜாஹித் அறிவித்தார். நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும்போது 'அவனுடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நான் இதை நபி(ஸல்) அவாக்ள் கூறக் கேட்கவில்லை. எனினும் 'மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்றார்.

789. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தினரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் துல்ஹுலைஃபாவில் பத்ஹா எனும் பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் 'நீ எதற்கு இஹ்ராம் அணிந்தாய்? (ஹஜ், உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்கு மட்டுமா?)' எனக் கேட்டார்கள். நான் நபி(ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நான் இஹ்ராம் அணிந்தேன்'' என பதிலளித்தேன். 'உன்னிடத்தில் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா?' என்று நபி(ஸல்) கேட்க நான் 'இல்லை'' என்றேன். அப்போது வலம் வரவும் ஸஃபா, மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடவும் அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்தேன். அதன் பின்னர் என் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். அவள் என் தலையை வாரினாள்; கழுவினாள்.

ஹஜ்ஜின் போது மாதவிடாய்.

790. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ் மாதத்தில், ஹஜ் இரவுகளில், ஹஜ் காலத்தில் புறப்பட்டு ஸரிஃப் எனுமிடத்தில் இறங்கினோம். நபி(ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர்களிடம் வந்து, 'யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தம் இஹ்ராமை உம்ராவுக்காக ஆக்கிக் கொள்ள விரும்பினால் அவ்வாறே ஆக்கிக் கொள்ளட்டும்; யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்'' என்றார்கள். தோழர்களில் சிலர் இதன்படி செய்தார்கள். சிலர் இதன்படி செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களோடிருந்த வசதிபடைத்த தோழர்களில் சிலருடனும் குர்பானிப் பிராணி இருந்ததால் அவர்களால் உம்ராவை மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட முடியவில்லை. என்னிடம் வந்த நபி(ஸல்) அவர்கள் நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் உங்கள் தோழர்களுக்குக் கூறியதைக் கேட்டேன்; நான் உம்ரா செய்ய முடியாமலாகி விட்டது'' என்றேன். 'உனக்கு என்னவாயிற்று?' எனக் கேட்டார்கள். 'நான் தொழ முடியாத நிலையிலுள்ளேன்'' என்றேன். 'அதனால் கவலை கொள்ள வேண்டாம்; ஆதமின் பெண் மக்களில் நீயும் ஒருத்தி! எனவே, இறைவன் அவர்களுக்கு விதியாக்கியதை உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்! அல்லாஹ் உனக்கு உம்ரா செய்யும் வாய்ப்பையும் தரலாம்'' என்றார்கள். ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவை வந்தடைந்தபோது நான் தூய்மையானேன். பிறகு மினாவிலிருந்து சென்று வலம்வந்தேன். நபி(ஸல்) அவர்களோடு வந்த கடைசிக் கூட்டத்தினரோடு புறப்பட்டு முஹஸ்ஸப் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்களுடனேயே தங்கினேன். அப்போது (என்னுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) அழைத்து, 'உம்முடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துச் சென்று உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து இருவரும் உம்ரா செய்யுங்கள். முடிந்ததும் இதே இடத்திற்குத் திரும்பி வாருங்கள். நான் உங்கள் இருவரையும் எதிர் பார்க்கிறேன்'' என்றார்கள். உடனே நாங்கள் புறப்பட்டோம். தவாஃபை முடித்து ஸஹ்ருடைய நேரத்தில் வந்து சேர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (''உம்ராவை) முடித்து விட்டீர்களா?' எனக் கேட்க 'ஆம்' என்றேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புறப்பட அனுமதித்தார்கள். மக்கள் அனைவரும் புறப்பட்டதும் மதீனாவை நோக்கி நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள்.

ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிவது (இஃப்ராத்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து இஹ்ராம் அணிவது (கிரான்) உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிவது. (தமத்துஉ) பலிப்பிராணியைக் கொண்டு வராதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றுதல்.

791. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் செய்ய நாங்கள் காணவில்லை. மக்காவை வந்தடைந்ததும் கஅபாவை வலம் வந்தோம். அதன் பிறகு குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் மனைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் நான் மாதவிடாய்க்காரியாக இருந்ததால் நான் வலம்வரவில்லை. (முஹஸ்ஸப் எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! மக்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால் நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன் என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'நாம் மக்காவை வந்தடைந்தபோது நீ வலம்வரவில்லையா?' எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். 'அப்படியானால் உன்னுடைய சகோதரனுடன் தன்யீம் எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு'' எனக் கூறினார்கள். ஸஃபிய்யா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'நானும் உங்கள் அனைவரின் பயணத்தையும் தடுத்துவிட்டதாக உணர்கிறேன்' என்று சொன்னபோது, நபி(ஸல்) 'காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! பத்தாம் நாளில் நீ வலம் வரவில்லையா?' என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) 'ஆம், செய்து விட்டேன்!'' என்றார். 'பரவாயில்லை! புறப்படு!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதன் பிறகு என்னை நபி(ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் இறங்கிக் கொண்டிருந்தேன் அல்லது அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

792. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நாங்களும் அவர்களுடன் சென்றிருந்தோம். சிலர் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்தும் சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் அணிந்தவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

793. மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார். நான் உஸ்மான்(ரலி) உடனும், அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ(ரலி), ஹஜ் உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து 'லப்பைக் பி உம்ரதின் வ ஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விடமாட்டேன்'' எனக் கூறினார்.

794. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போரிடத் தடை செய்யப்பட்ட மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃப்ருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்வது கூடும்'' என்று கூறிவந்தனர். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்களாக மக்கா நகருக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள். இது தோழர்களுக்கு மிகக் கடுமையாகத் தெரிந்தது. இதனால் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எச்செயல்கள் அனுமதிக்கப்படும்?' எனக் கேட்டனர். அதற்கு 'அனைத்து (விலக்கப்படாத) செயல்களும் அனுமதிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

795. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். ''இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபட வில்லையே! என்ன காரணம்?' என நான் நபி(ஸல்) அவர்களைக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டு விட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாது'' என்றார்கள்.

796. நஸ்ரு இப்னு இம்ரான் அறிவித்தார். நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, 'ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது' எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது ('தமத்துஉவோ) நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்' என்று கூறி, 'நீ என்னுடன் தங்கிக் கொள். என்னுடைய செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்' எனக் கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் இப்னு இம்ரானிடம் கேட்டேன். 'நான் கண்ட கனவே காரணம்' என அவர் கூறினார் என்று ஷுஉபா கூறுகிறார்.

797. அபூ ஷிஹாப் அறிவித்தார். நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம் வந்து 'இப்படித் தமத்துஉ - செய்தால் உம்முடைய ஹஜ் மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும்; (குறைந்த நன்மைகளே கிடைக்கும்') என்றனர். நான் அதா இடம் சென்று இதைப் பற்றிக் கேட்டேன். அதா கூறினார்; 'நபி(ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி 'நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஒடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்றார்கள். அதற்குத் தோழர்கள் 'நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தால் அதை (பலிப்பிராணியை) அந்த இடத்தில் சேர்க்கும்வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது'' என்றார்கள். உடனே தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்' என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் என்னிடம் கூறினார்.


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தல்.

798. இம்ரான்(ரலி) அறிவித்தார். ''நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தோம். குர்ஆனின் மூலமே இச்சட்டம் இறங்கியது; எனினும் சிலர் 'தமத்துஉ கூடாது' எனத் தம் சுய அறிவால் தாம் நாடியதை எல்லாம் கூறுகின்றனர்.''

மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?

799. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

மக்காவின் சிறப்பும் கஅபாவின் நிர்மாணமாகும்.

800. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது கஅபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!'' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் 'கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.

801. ஆயிஷா(ரலி) அறிவித்தார். என்னிடம் நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உன்னுடைய கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லையென்றால் கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். (இடிக்கப்பட்டதும்) வெளியே விடப்பட்ட பகுதியையும் அதனுள் சேர்த்து(க் கட்டி) இருப்பேன். உயர்ந்திருக்கும் தளத்தைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்; இதன் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்!'' என்றார்கள். இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை கஅபாவை இடிக்கத் தூண்டியது இச்செய்திதான். 'இப்னு ஸுபைர்(ரலி) அதை இடித்துக் கட்டியதையும் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் பார்த்தேன்; மேலும் (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் இருப்பதைக் கண்டேன்'' என யஸீத் இப்னு ரூமான் கூறுகிறார். ''இந்த இடம் எங்கே இருக்கிறது?' என (யஸீதிடம்) கேட்டேன். அதற்கவர் 'இப்போதே அதை உனக்குக் காட்டுகிறேன்' என்றார். அவருடன் ஹிஜ்ர் எனும் வளைந்த பகுதிக்கு நான் சென்றேன். ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி 'இந்த இடம் தான்' என்றார். நான் அதை அளந்து பார்த்தபோது ஹிஜ்ர் எனும் பகுதியிலிருந்து சுமார் ஆறு முழங்கள் தள்ளி அடித்தளத்தைக் கண்டேன்'' என ஜரீர் கூறுகிறார்.

802. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். ''இறைத்தூதர் அவர்களே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?' என நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் '(அபூ தாலிபின் மகன்) அகீல், தம் தங்கும் விடுதிகள் அல்லது வீடுகள் எவற்றையாவது விட்டுச் சென்றுள்ளாரா என்ன?' எனக் கேட்டார்கள். அபூதாலிபின் சொத்துக்களுக்கு அகீலும், தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர்(ரலி), அலீ(ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூதாலிப் இறந்தபோது) அகீலும், தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர். 'இறைநம்பிக்கையாளர், இறைமறுப்பாளரின் சொத்திற்கு வாரிசாக மாட்டான்'' என உமர்(ரலி) கூறினார். ''நிச்சயமாக, இறைநம்பிக்கை கொண்டு, மார்க்கத்துக்காக நாடு துறந்து, தம் செல்வங்களையும், உயிர்களையும் இறைவழியில் தியாகம் செய்தவர்களும், இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியவர்களும் ஒருவருக்கொருவர் உரிமையுடையவர்களாவார்கள்' என்ற (திருக்குர்ஆன் 08:72) இறைவசனத்தை (மார்க்க அறிஞர்களான) முன்னோர்கள் (நம்பிக்கையாளர்களே நம்பிக்கையாளர்களுக்கு வாரிசாவார்கள் என்கிற) தம் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி வந்தார்கள்'' என இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம்.

803. நபி(ஸல்) அவர்கள் மக்காவை நெருங்கியபோது, 'அல்லாஹ் நாடினால் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம்; அது குறைஷிகள் 'குஃப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்' என்று சத்தியம் செய்த இடமாகும்'' என்று கூறினார்கள்.

804. அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

805. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, '(ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதை விட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

806. ''யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

கஅபாவை இடிப்பது.

807. ''(வெளிப் பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹஜருல் அஸ்வத்.

808. ஆபிஸ் இப்னு ரபீஆ அறிவித்தார். உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்.

கஅபாவினுள் செல்லாமலிருப்பது.

809. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது வலம் வந்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?' என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை!'' என பதிலளித்தார்.

கஅபாவின் மூலைகளில் நின்று தக்பீர் கூறுதல்.

810. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

(தவாஃபில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது எவ்வாறு துவங்கியது?

811. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, 'யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்' என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி(ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

மக்காவிற்கு வந்ததும் முதல் தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கி ஓடுவதும்.

812. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.

ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது.

812. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்; (மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள்.

813. அஸ்லம் அறிவித்தார். உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல் தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனை விட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள்.

814. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.''இப்னு உமர்(ரலி) அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?' என நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் கேட்டபோது, 'முத்தமிடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்' எனக் கூறினார்'' என்று உபைதுல்லாஹ் அறிவித்தார்.

தலை வளைந்த கம்பின் மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொடுதல்.

815. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது.

816. ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார். ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!' எனக் கூறினார்கள். அப்போது நான், 'கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!'' என (மீண்டும்) கூறினார்கள்.

மக்காவிற்கு வந்தவர் தம் இருப்பிடத்திற்குச் செல்வதற்கு முன்னால் வலம் வந்து, இரண்டு ரக்அத் தொழுது, பிறகு ஸஃபாவிற்குச் செல்வது.

817. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக உளூச் செய்து, 'தவாஃப் வலம் வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரும் இது போன்றே ஹஜ் செய்தார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார். ''நான் என் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவரும் முதன்முதலாக வந்தார். முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் இவ்வாறு செய்ததையே பார்த்தேன். மேலும் 'நானும், என் சகோதரியும், தந்தை ஸுபைரும், இன்னாரும், இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்ட பின் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்'' என்று என் தாய் (அஸ்மா) கூறினார்.

818. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ வந்தால் முதன்முதலாக வலம் வருவார்கள். அதில் முதல் மூன்று சுற்றுக்களில் விரைந்து ஓடுவார்கள்; பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவார்கள்.

வலம் வரும்போது பேசுவது.

819. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவை வலம்வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அருகே ஒருவர் தம் கையை ஒட்டக வாரினாலோ, கயிற்றினாலோ, வேறு ஏதோ ஒன்றினாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டிக் கொண்டு (வலம்வந்த வண்ணம்) சென்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் துண்டித்துவிட்டு 'இவருடைய கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!'' என்று அந்த மற்றொருவரிடம் கூறினார்கள்.

கஅபாவை நிர்வாணமாக வலம்வரக் கூடாது. இணைவைப்பவர்கள் ஹஜ் செய்வது கூடாது.

820. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், 'எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் வலம்வரக் கூடாது' என அறிவிக்கச் செய்தார்கள்.


ஒருவர் முதலாம் வலம் வந்துவிட்டு பிறகு அரஃபாவுக்குச் சென்று திரும்பும்வரை கஅபாவிற்குச் செல்லாமலும் வலம்வராமலும் இருப்பது.

821. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது வலம்வந்தார்கள்; ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்தத் வலம் வருவதற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும்வரை கஅபாவிற்குச் செல்லவில்லை.''

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வினியோகித்தல்.

822. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி). (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் வினியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக் கொள்ள, நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

823. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) (தம் மகன்) ஃபள்ல்(ரலி) அவர்களிடம் 'ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவர்களிடமுள்ள தண்ணீரை எடுத்து வந்து நபி(ஸல்) அவர்களுக்குக் கொடு!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்!'' எனக் கேட்க, அப்பாஸ்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்கள் கரங்களை இதனுள் போடுகிறார்கள்'' என்று கூறினார்கள். இறுதியாக அதிலிருந்தே தண்ணீர் குடித்துவிட்டு, ஸம்ஸம் கிணற்றிற்கு வந்தார்கள். அங்கு சிலர், தண்ணீர் வழங்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், 'செய்யுங்கள்! நீங்கள் நல்ல வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள்!' எனக் கூறிவிட்டு 'மக்கள் உங்களை மிகைத்துவிட மாட்டார்கள் என்றிருந்தால் ஒட்டகத்திலிருந்து இறங்கி நான் இதில் தண்ணீரைச் சுமப்பேன்'' என்று தம் தோளின் பக்கம் சைகை செய்து கூறினார்கள்.

ஸம் ஸம்.

824. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள். அன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா சத்தியம் செய்து கூறுகிறார் என ஆஸிம் கூறுகிறார்.

ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடுவது கடமை; அது அல்லாஹ்வின் சின்னமாகும்.

825. உர்வா அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த முஷல்லல் என்னும் குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வாவை வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா - மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அருளினான். மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே வலம் வருவதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். எனவே, அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதை விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை' எனக் கூறினார். ஸுஹ்ரி கூறுகிறார்: நான் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மானிடம் இதுபற்றித் தெரிவித்தேன். அதற்கவர் கூறினார்: நான் கேள்விப்படாத விளக்கமாகும் இது! மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் அணிவார்கள் என்று ஆயிஷா(ரலி) குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனில் கஅபாவைத் வலம்வரவேண்டும் என்று கூறி அல்லாஹ் ஸஃபா, மர்வாவைப் பற்றிக் குறிப்பிடாததால், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுகிறோம். அல்லாஹ்வோ ஸஃபாவைப் பற்றிக் கூறாமல் கஅபாவைத் வலம்வருவது பற்றிக் கூறுகிறானோ? ஸஃபா மர்வாவுக்கிடையே நாங்கள் ஓடுவது எங்களின் மீது குற்றமாகுமா?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது 'ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்'' என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று பல அறிஞர்கள் கூறியதை கேட்டுள்ளேன். நான் இந்த வசனம் இரண்டு சாரார் விஷயத்தில் இறங்கியது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாரார் மடமைக் காலத்தில் ஸஃபா, மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதியவர்கள். இன்னொரு சாரார் ஏற்கெனவே அவ்வாறு வலம் வந்து கொண்டிருந்து இஸ்லாத்தில் நுழைந்த பின்பு அல்லாஹ் கஅபாவைப் பற்றிக் குறிப்பிட்ட பின்பும் ஸஃபாவைக் குறிப்பிடாமல் கஅபாவை மட்டும் வலம் வருமாறு கூறியதால் இப்போது அவ்விரண்டையும் வலம் வருவது பாவமாகுமோ எனக் கருதியவர்கள்.

ஸஃபா மர்வாவிற்கிடையே ஓடுதல்.

826. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், முதல் வலம்வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா - மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள்.உபைதில்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (தவாஃபின் போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் நடந்து தானே செல்வார்கள்? என நாஃபிவு இடம் கேட்டேன். அதற்கவர் 'ருக்னுல் யமானியில் ஜன நெருக்கடி ஏற்பட்டாலே தவிர அவர் நடந்து செல்லமாட்டார்; ஏனெனில் அவர் ருக்னுல் யமானியைத் தொட்டு முத்தமிடாமல் விடுவதில்லை'' எனக் கூறினார்.

ஸஃபா, மர்வாவுக்கிடையே உளூவின்றி தொங்கோட்டம் ஓடுதல்.

827. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ(ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிகிறேன்'' என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பலிப்பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்து தலை முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) 'எங்கள் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) எப்படி மினாவுக்குச் செல்வது?' என்று பேசிய செய்தி, நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் '(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்வது கூடும் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் பலிப்பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் பலிப்பிராணியை மட்டும் என்னுடன் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்' எனக் கூறினார்கள். மேலும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே, அவர் இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் இறையில்லம் கஅபாவை வலம்வந்தார். மேலும், ஆயிஷா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எல்லோரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிச் செல்கிறீர்கள். நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேனே!' எனக் கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரை ஆயிஷா(ரலி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின் உம்ராவையும் நிறைவேற்றினர்கள்.

(ஹஜ்ஜுக்கு செல்வோர்) துல்ஹஜ் 8ஆம் நாள் லுஹரை எங்கே தொழுவது?

828. அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை(ரஹ்) கூறினார்: நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் லுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் 'மினாவில்' என்றார். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும்போது எங்கு அஸர் தொழுதார்கள் எனக் கேட்டதும் 'அப்தஹ்' எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, 'உம்முடைய தலைவர்கள் செய்வது போன்றே செய்வீராக!' என்றும் கூறினார்.

அரஃபா நாளில் நோன்பு நோற்றல்.

829. உம்முல் ஃபள்ல்(ரலி) அறிவித்தார். அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன்; அதையவர்கள் குடித்தார்கள்.

அரஃபா நாளில் பகல் பொழுதில் புறப்படுதல்.

830. ஸாலிம் அறிவித்தார். அப்துல் மலிக்(பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமருக்கு மாற்றமாக நடந்து கொள்ள வேண்டாம் என ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜுக்கு) வந்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அவர் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார். உடனே ஹஜ்ஜாஜ் சாயம் பூசப்பட்ட போர்வையுடன் வெளிவந்து, 'அபூ அப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?' எனக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் இங்கிருந்து புறப்பட வேண்டியது தான்' என்றார். ஹஜ்ஜாஜ் 'இப்போதேவா?' எனக் கேட்டதற்கு அவர் 'ஆம்' என்றார். ஹஜ்ஜாஜ் 'நான் இதோ குளித்துவிட்டுப் புறப்படுகிறேன்; அவகாசம் கொடுங்கள்' எனக் கூறினார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜாஜ் புறப்படுவதுவரை (தம் வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார். ஹஜ்ஜாஜ் எனக்கும் என்னுடைய தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி, (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் இப்னு உமரைப் பார்த்தார். இப்னு உமர்(ரலி), '(ஸாலிம்) உண்மையே கூறினார்' என்றார்.

அரஃபாவில் தங்குதல்.

831. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒருமுறை) அரஃபா தினத்தில் என்னுடைய ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்றிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், இவர் (நபி(ஸல்)) குரைஷிக் குலத்தவராயிற்றே!' இவருக்கு இங்கு என்ன வேலை? என என்னுள் கூறிக் கொண்டேன். (ஏனெனில் மக்காக் குறைஷிகள் ஹரம் எல்லைக்கு வெளியே ஹஜ்ஜின் எந்தக் கிரியைகளையும் செய்வதில்லை).

அரஃபாவிலிருந்து திரும்பும்போது நடுத்தர(வேக)த்தில் நடத்தல்.

832. உர்வா அறிவித்தார். நான் உஸாமா(ரலி)வுடன் அமர்ந்திருக்கும்போது, உஸாமாவிடம், 'கடைசி ஹஜ்ஜில் அரஃபாவிலிருந்து திரும்பிய நபி(ஸல்) அவர்களின் நடை எவ்வாறிருந்தது?' எனக் கேட்கப்பட்டது. அதற்கவர், 'நபி(ஸல்) அவர்கள் சாதாரணமாக நடப்பார்கள். (மக்கள் நெருக்கடியில்லாத) விசாலமான இடம் வந்ததும் விரைந்து நடப்பார்கள்' எனக் கூறினார்.

(அரஃபாவிலிருந்து) திரும்பும்போது அமைதியாகச் செல்வது பற்றிய நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் சாட்டையால் அவர்கள் சைகை செய்ததும்.

833. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தம் சாட்டையால் சைகை செய்து, 'மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ விரட்டுவதிலோ இல்லை'' எனக் கூறினார்கள்.

முஸ்தலிபாவிலிருந்து...

834. அஸ்மா(ரலி) அவர்களின் ஊழியர் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார். அஸ்மா(ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, 'மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?' எனக் கேட்டார்கள். நான் 'இல்லை!'' என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு 'சந்திரன் மறைந்துவிட்டதா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றதும் 'புறப்படுங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், 'அம்மா! நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகிறதே!'' என்றேன். அதற்கவர்கள், 'மகனே! நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்'' என்றார்கள்.

835. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் முஸ்தலிஃபாவில் தங்கினோம். அப்போது ஸவ்தா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், மக்கள் புறப்படுவதற்கு முன்பாக, தாம் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மெதுவாக நடக்கக் கூடியவராக இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, மக்கள் அங்கிருந்து புறப்படும் முன் அவர் புறப்பட்டுவிட்டார். நாங்கள் மட்டும் ஸுப்ஹு வரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். ஸவ்தா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றது போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும் விட அது எனக்கு அதிகப் பிரியமானதாக இருந்திருக்கும்.

முஸ்தலிஃபாவில் ஃபஜ்ர் தொழுவது எப்போது?

836. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர் தனித்தனியாக இரண்டு தொழுகைகளை தனித்தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள். இரண்டு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமான வேளையில் ஃபஜ்ர் தொழுதார்கள். அப்போது சிலர் 'ஃபஜ்ர் உதயமாகிவிட்டது' என்றும் சிலர் 'ஃபஜ்ரு உதயமாகவில்லை'' என்று கூறிக் கொண்டிருந்தனர். பிறகு அவர் 'இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று மக்ரிப், இஷாவாகும். ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில் தான்) முஸ்தலிஃபாவை அடைவார்கள். இன்னொன்று இந்த நேரத்தின் ஃபஜ்ருத் தொழுகை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' எனக் கூறினார். பிறகு அவர் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் இப்போது இங்கிருந்து திரும்பினால் நபி வழியைச் செயல்படுத்தியவராவார்!' எனக் கூறினார்.

'இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா அல்லது உஸ்மான்(ரலி) புறப்பட்டது விரைவானதா?' என்று எனக்குத் தெரியயவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான்(ரலி) திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்வூத்(ரலி) துல்ஹஜ் 10-ஆம் நாள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து கல்லெறியும்வரை தல்பியா சொல்லிக் கொண்டேயிருந்தார்.

முஸ்தலிஃபாவிலிருந்து எப்போது திரும்புவது?

837. அம்ர்ப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். உமர்(ரலி) முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரு தொழுததை கண்டேன். அங்கு தங்கிய அவர், 'இணைவைப்போர் சூரியன் உதயமாகும்வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை. மேலும் அவர்கள் 'ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்!' என்றும் கூறுவார்கள்: ஆனால் நபி(ஸல்) அவர்களோ, இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்!'' என்று கூறிவிட்டு சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்.

பலிப்பிராணியில் சவாரி.

838. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதில் ஏறிக் கொள்வீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர் 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் '(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!'' என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி(ஸல்) அவர்கள் 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!'' என்று கூறினார்கள்.

குர்பானி ஒட்டகங்களை ஒட்டிச் செல்லல்.

839. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (எனவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை); நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், 'உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்துள்ளார்களோ அவர் தம் ஹஜ்ஜை நிறைவேற்றாதவரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது. யார் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையோ அவர் ஹஜ்ஜு நாள்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தம் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!'' என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி(ஸல்) அவர்கள் வந்ததும், இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு முதலாவதாக ருக்னை (ஹஜருல் அஸ்வதை) முத்தமிட்டார்கள். பிறகு மூன்று சுற்றுக்கள் (தோள்களைக் குலுக்கி) ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் வலம்வந்தார்கள். வலம்வந்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸலாம் கொடுத்தும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஏழு முறை சஃயு செய்தார்கள். பிறகு, தம் ஹஜ்ஜை நிறைவேற்றும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மேலும் அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் தம் குர்பானிப் பிராணியை பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். மக்களில், குர்பானி கொடுப்பதற்காகப் பிராணியைக் கொண்டு வந்தவர்களும் நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே செய்தார்கள்.

குர்பானிப் பிராணிக்கு மாலையிடுதல்.

840. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான்(ரலி) ஆகியோர் அறிவித்தார். ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள்.

ஒருவர் தம் கையாலேயே பலிப் பிராணியின் கழுத்தில் மாலைகளைத் தொங்கவிடுதல்.

841. அம்ர் பின்த் அப்திர் ரஹ்மான் அறிவித்தார். ''பலிப்பிராணியைக் கொண்டு வருகிறவர் அதை பலியிடும்வரை ஹஜ் செய்பவரின் மீது விலக்கப்பட்டதெல்லாம் பேணுக என இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறாரே!'' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஸியாத் இப்னு அபீ சுஃப்யான் எழுதிக் கேட்டதற்கு ஆயிஷா(ரலி)அவர் சொல்வது போலில்லை. நான் நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்கு, கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை என்னுடைய கையாலேயே கோர்த்திருக்கிறேன்; நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு, பிராணியை என்னுடைய தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பி வைத்தார்கள்; ஆனால் அந்த பலிப்பிராணி பலியிடப்படும்வரை அவர்கள், தமக்கு அல்லாஹ் அனுமதித்த எவரையும் தடுத்துக் கொள்ளவில்லை!'' எனக் கூறினார்.

842. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் ஆட்டிற்குக் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையொன்றைத் தொடுத்தேன். அந்த (கழுத்தில் அடையாளம் தொங்கவிடப்பட்ட) ஆட்டை நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) அனுப்பிவிட்டு அவர்கள் (வீட்டில்) இஹ்ராமில்லாத நிலையில் தங்கினார்கள்.

கம்பளியாலான கழுத்து மாலைகள்.

843. உம்முல் மூமினீன் (ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளை என்னிடத்திலிருந்த கம்பளியால் செய்தேன்.

பலிப்பிராணிக்குச் சேணம் பூட்டல்.

844. அலீ(ரலி) அறிவித்தார். பலியிடும் பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்து விடவேண்டுமென நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

ஒருவர் தம் மனைவியரின் சார்பாக அவர்களின் அனுமதியின்றி மாட்டைப் பலியிடுவது.

845. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும் 'பலிப்பிராணியைக் கொண்டு வராதவர்கள் வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி முடித்தவுடன், இஹ்ராமைக் களைந்து விடவேண்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. 'இது என்ன?' என கேட்டேன். மக்கள் 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரின் சார்பாக பலியிட்டார்கள்'' என்றனர்.

மினாவில் நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் பலியிடுவது.

846. நாஃபிவு அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வழக்கமாக நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் பலியிடுவார்.

ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு நிற்க வைத்து அறுத்தல்.

847. ஸியாத் இப்னு ஜுபைர் அறிவித்தார். ''இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, 'அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!' என்று கூறியதை பார்த்தேன்.''

அறுப்பவருக்குக் கூலியாக பலிப்பிராணியில் எதையும் கொடுக்கக் கூடாது.

848. அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். இன்னொரு அறிவிப்பில் 'பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.

குர்பானி இறைச்சியை சேமித்து வைத்தல்.

849. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாள்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் சாப்பிட மாட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'சாப்பிடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம். 'மதீனா வரும்வரை (சாப்பிட்டோம்)' என்று ஜாபிர்(ரலி) கூறினாரா என அதாவிடம் கேட்டேன். அதற்கவர் 'இல்லை' என்றார் என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.

இஹ்ராமிலிருந்து விடுபடும்போது முடியைக் குறைத்துக் கொள்வதும் மழித்துக் கொள்வதும்.

850. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!' எனக் கூறியதும் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்'' என்றனர்.

851. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்'' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)'' என்று கூறினார்கள். இன்னொரு அறிவிப்பின்படி 'அல்லாஹ் தலையை மழித்துக் கொள்பவர்களுக்குக் கருணை புரிவானாக! என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூறினார்கள் என உள்ளது. இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது முறையில், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...'' எனக் கூறினார்கள் என உள்ளது.

852. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்...'' என்றனர். (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்...'' என்றனர். நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக!)'' எனக் கூறினார்கள்.

853. முஆவியா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களின் முடியைக் கத்தரிக் கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்.

கல்லெறிதல்.

854. வபரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ''நான் எப்போது கல்லெறிவது?' என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'உம்முடைய தலைவர் எறியும்போது நீரும் எறியும்!'' என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, 'நாங்கள் சூரியன் உச்சி சாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல் எறிவோம்!'' எனக் கூறினார்கள்.

பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிதல்.

855. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், 'அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லெறிகின்றனர்?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இதுதான்!'' எனக் கூறினார்கள்.

(ஜம்ராக்களின் மீது கல்லெறியும் போது) ஏழு சிறு கற்களை எறிய வேண்டும்.

856. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு 'இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!'' என்று கூறினார்கள்.

இரண்டு ஜம்ராக்களில் கல்லெறிந்த பின்பு கிப்லாவை முன்னோக்கி, சமதளமான தரையில் நிற்பது.

857. ஸாலிம்(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப்பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, 'இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!'' எனக் கூறுவார்கள்.

தவாஃபுல் வதா (விடை பெறும் வலம்)

858. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''இறையில்லம் கஅபாவை வலம்வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)

859. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிபு, இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுதுவிட்டு முஹஸ்ஸப் என்னும் (மக்காவுக்கும் மினாவுக்குமிடையேயுள்ள) ஓரிடத்தில் உறங்கினார்கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அங்கு வலம்வந்தார்கள்.

860. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃபுஸ் ஸியாரத் செய்தால் (மக்காவைவிட்டுச்) சென்று விடுவதற்கு அவளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது. இப்னு உமர்(ரலி) 'மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவை விட்டுச் செல்லக்கூடாது!'' என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, 'நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்!'' எனக் கூறினார்கள்.

முஹஸ்ஸபில் தங்குதல்.

861. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல. அது நபி(ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம் அவ்வளவுதான்!''

மக்காவிலிருந்து திரும்பும்போது ஃதூத்துவாவில் தங்குதல்.

862. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மக்காவுக்கு) வரும்போது ஃதூத்துவாவில் இரவு தங்குவார், விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்பார். (மக்காவிலிருந்து) திரும்பும்போதும் ஃதூத்துவாவில் விடியும்வரை தங்குவார். மேலும், 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்வார்கள்' என்றும் கூறுவார்.

Wednesday, September 28, 2011

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)

1.ஆதம் (அலை):உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.

2.இத்ரீஸ்(அலை):இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.

3.நூஹ்(அலை):ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.

Saturday, July 16, 2011

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?

குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்

2. ஒத்துழைப்பு

3. மனித நேயம்

4. பொழுதுபோக்கு

5. ரசனை

6. ஆரோக்கியம்

7. மனப்பக்குவம்

8. சேமிப்பு

9. கூட்டு முயற்சி

10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.


28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.



கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே.
 
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு
.

Tuesday, June 28, 2011

எடை கூடாமல் இருக்க சில யோசனைகள்


* தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

* கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

* பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

* படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

* இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

* முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

Saturday, June 25, 2011

குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?

ஐயம்: குழந்தைபிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா? என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், "இன்ன வாரத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் வாருங்கள். குழந்தையோடு செல்லுங்கள்" என்று டாக்டர்கள் கூறி அதன்படி குழந்தையையும் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இது முரண்பாடு தானே? (மின்னஞ்சல் வழியாக சகோதரர் வேணுகோபாலன்)
 தெளிவு: அன்பு சகோதரர் வேணுகோபாலன் அவர்களே!

உங்களது இந்தக் கேள்வி, தங்களால் சத்தியத்தை அறிய, சந்தேக நிவர்த்திக்காக தெளிவு பெற எழுப்பப்பட்ட ஒரு கேள்வி எனும் அடிப்படையில் இதை நாம் அணுகுவதோடு உங்களுக்கு எங்களது பாராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.

" ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).

"நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ..." (அல்குர்ஆன் 31:34).

"ஒவ்வொரு பெண்ணும் (தன் கருவறையில்) சுமந்து கொண்டிருப்பதையும் அவை சுருங்கிக் குறைவதையும் விரிந்து கொடுப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் தீர்மானிக்கப் பட்ட அளவு இருக்கின்றது" (அல்குர்ஆன் 13:8).

"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஐயமிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்!) நாம் நிச்சயமாக உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், அடுத்த கட்டத்தில் அலக்கிலிருந்தும், அதையடுத்து அரைகுறைத் தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்து, பின்பு குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் ..." (அல்குர்ஆன் 22:5)

போன்ற இறைவசனங்கள் உங்களுடைய ஐயத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.

முதலாவதாக,

ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண்ணுக்கு இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காலக்கெடு என்பது அப்பெண் கருத்தரித்ததிலிருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இக்கணக்கு அப்பெண்ணுக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கணக்கைச் சொல்வதற்கு ஒரு மகப்பேறு மருத்துவர்கூட இப்போது தேவையில்லை.
http://www.babycenter.com/pregnancy-due-date-calculator என்ற தளத்தில் கடைசியாக மாதவிலக்கு ஏற்பட்ட நாளைக் குறிப்பிட்டால் குழந்தை பிறக்கப் போகும் தேதி, மாதம், ஆண்டு எல்லாம் சொல்லி விடும். அந்தக் கணக்குச் சரியாகவுமிருக்கும்; சற்றே முன்-பின்னும் இருக்கும்.

"கம்ப்யூட்டரே தெரிந்து கொண்டு சொல்லும்போது கடவுளுக்குத் தெரிந்தாலோ தெரியா விட்டாலோ நமக்கென்ன?" என்ற கேள்வி வரும்.

கம்ப்யூட்டரையும் அதற்கான மென்பொருளையும் உண்டாக்கியவன் மனிதன். அந்த மனிதனையே உண்டாக்கியவன் இறைவன் என்பது முஸ்லிம்கள் மட்டுமின்றி, கடவுளை நம்புகின்ற எல்லா ஆத்திகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கம்ப்யூட்டருக்கும் மருத்துவருக்கும் ஒரு பெண் கருவடைவதற்கு முன்னர், இன்ன நாளில், இன்ன நேரத்தில், இன்ன இனத்தில், இன்ன இடத்தில், இன்ன வகையில் குழந்தை பெறுவாள் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையாகும். துல்லியம்தான் இங்குத் தலையாய பேசுபொருள்.

குறிப்பாக, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு, கி.பி எழுநூறுகளின் தொடக்கத்தில் அருளப்பட்டு, அவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற குர்ஆன் அடிப்படையாகத் திகழ்கின்றது. ஒரு குழந்தை கருவுருவதைப் பற்றி அது கூறுவதைக் கேட்போம்:

"(பெண்ணின் சினைமுட்டையோடு) கலவையான விந்திலிருந்து நாமே மனிதனைப் படைத்தோம் ..." (அல்குர்ஆன் 76:2).

முதன் முதலாகக் கருவுலகைப் பற்றி அறிவியல் உலகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1615இல்தான். ஆனால், "பெண்ணுடைய சினை முட்டையோடு ஆணுடைய விந்து கலந்து குழந்தை உருவாகிறது" என்று குர்ஆன் அறிவிப்பது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது வியக்க வைக்கும் செய்தியன்றோ!

There are a multitude of statements in the Quran on the subject of human reproduction which constitute a challenge to the embryologist seeking a human explanation for them. It was only after the birth of the basic sciences which contributed to our knowledge of biology and the invention of the microscope, that humans were able to understand the depth of those Quranic statements. It was impossible for a human being living in the early seventh century to have accurately expressed such ideas. There is nothing to indicate that people in the Middle-East and Arabia knew anything more about this subject than people living in Europe or anywhere else.

முழுதும் படிக்க
http://www.sultan.org/articles/QScience.html

குர்ஆன் கூறுவதைக் கேட்ட விஞ்ஞானிகளின் வியப்பு ஆவணமாக்கப் பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=XaSfE1DW2-w
 
http://www.slideshare.net/moralsandethics/scientists-comments-on-h-quran

இரண்டாவதாக,

உங்களுடைய கேள்வியான இயல்புக்கு மாற்றமாக நடைபெறும் சிஸேரியன் விஷயத்துக்கு வருவோம்.

கருவைச் சுமக்கும் தாயின் உயிருக்கோ கருவிலிருக்கும் மகவின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அந்த ஆபத்தைக் களைவதற்கான கடைசியாகக் கையாளும் முயற்சியாகத்தான் சிஸேரியன் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

 நாளடைவில், அது நாள்-நட்சத்திரம் மீது மோகம் கொண்ட சிலரால், இயல்பான பேறுநாளைக்கு முன்னதாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டுச் செயற்கையாக சிஸேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

ஆனால், எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை. காரணம், மகப்பேற்றில் கடைசி நேர இடைஞ்சல்கள் பல உள்ளன. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்.

துல்லியத்தில் மனிதர் தோற்பர்; இறைவன் தோற்பதில்லை. ஏனெனில், மனிதனின் அறிவு வரையறுக்கப் பட்டது; இறைவனின் அறிவுக்கு வரையறை இல்லை.

அவனே முற்றாய் அறிந்தவன்.
 

Friday, June 24, 2011

மனைவியின் கடமைகள்

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.

இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.

மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.

இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079


இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083


பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.

அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான். கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.

ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும். இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.

சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316


மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

-அபுரபீஹா