அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Sunday, May 22, 2011

கனிவாக நடந்துக் கொள்வோம்

M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)

“கனிவு” என்ற வார்த்தைக்கு அறபியில் “அர்ரிப்க்” என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது “உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்” ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக்கூடியவனாக உள்ளான்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், அறிஞர் “லைஸ்” அவர்கள் கூறும் போது: “கனிவென்பது, ஒருவர் தம் அயலவரோடு கனிவாக நடந்து கொள்வதும், அவர்களுடன் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதுமாகும்” என்கிறார்.

மேலும், இவ்வார்த்தயை இஸ்லாமியப் பரிபாசையின் அடிப்படையில் நோக்குகையில் அதன் விளக்கமானது பின்வருமாறு அமையும்: “ஒருவர் தம் அயலவருடன் சொல்லாலும் செயலாலும் கனிவாக நடந்து கொள்வதும், அவர்களுடன் இலகுவான நடைமுறைகளைக் கையாளுவதுமாகும்.” – பத்ஹூல் பாரி: 10ஃ449 , தலீலுல் பாலிஹீன்: 3ஃ89

ஒரு முறை “ஸூப்யானுஸ் ஸவ்ரி” (ரஹ்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி: “கனிவு என்றால் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்: “அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்.” அப்போது இமாமவர்கள்: “அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்” என பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள். “கடினமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் கடினமாக நடந்து கொள்வதும், மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் மென்மையாக நடந்து கொள்வதும், வாளேந்திப் போராட வேண்டிய இடத்தில் வாளேந்திப் போராடுவதும், சாட்டையைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சாட்டையைப் பயன்படுத்துவதுமே கனிவாகும்” என விளக்கினார்கள்.

கனிவு பற்றி அல்குர்ஆனில்…

அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும் , சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – ஆல இம்றான்: 159

மேலும், அல்லாஹ் பிறிதோர் இடத்தில் கூறும் போது

“நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான்” ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று அல்லாஹ் கூறுகிறான்.) -தாஹா: 43,44

கனிவு பற்றி ஹதீஸ்களில்…

* -”புகாரி” மற்றும் “முஸ்லிம்” ஆகிய கிரந்தங்களில் “மாலிக் இப்னு அல் ஹூவைரிஸ்” (ரழி) அவர்களின் அறிவிப்பில், சில ஸகாபாக்கள் நபியவர்களிடத்தில் 20 நாட்கள் தங்கியிருந்து மார்க்கக் கல்வியினை கற்றுக் கொண்டு தமது கோத்திரத்தினரிடம் திரும்பிச் செல்ல நாடியபோது, தாம் இவ்வளவு காலமும் நபியவர்களிடத்தில் கழித்த நாட்களில் நபியவர்கள் தங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப்பற்றிக் கூறும் போது: “அவர் அறிவாளியாகவும் கனிவானவராகவும் இருந்தார்” எனக் கூறினார்கள்.
* -நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக கனிவைக் கடைபிடிக்கும் எல்லா விடயங்களிலும் அழகு தென்படும், அது புறக்கணிக்கப்படும் எல்லா விடயங்களிலும் அசிங்கம் தென்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்
* நபியவர்கள், இந்த உம்மத்திற்கு தலைமை தாங்கக் கூடிய தலைவர்களுக்காகப் பிரார்த்திக்கும் போது… “இறைவா! எவர் எனது உம்மத்தின் பொறுப்பை ஏற்று, அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறாரோ அவருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பாயாக! மேலும், எவர் எனது உம்மத்தின் பொறுப்பை ஏற்று அவர்களுடன் கனிவாக நடந்து கொள்கிறாரோ அவருடனும் நீ கனிவாக நடந்து கொள்வாயாக!” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்
* கனிவாக நடந்து கொள்ளக்கூடிய சுபாவம் படைத்தவர்கள் பற்றி நபியவர்கள் கூறும் போது….. “எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்பட்டுள்ளதோ, அவருக்கு நலவில் இருந்தும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்படாது தடுக்கப்பட்டுள்ளதோ அவருக்கு நலவில் இருந்தும் ஒரு பங்கு தடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரழி) ஆதாரம்: திர்மிதி

கனிவு பற்றி அறிஞர்களின் கூற்றுக்கள்…

* “அபூ தர்தா” (ரழி) அவர்கள்: “ஒருவரிடத்தில் மார்க்க அறிவுள்ளது என்பதற்கு சிறந்த அடையாளம் அவர் தனது வாழ்வில் கனிவாக நடந்து கொள்வதாகும்.”
* “ஹிஷாம் இப்னு உர்வா” (ரழி) அவர்கள் தனது தந்தையைத் தொட்டும் அறிவிக்கையில்: “ஞானத்தில் இருந்தும் எழுதப்பட்டுள்ள விடயமாவது: “கனிவு ஞானத்தின் தலையாய அம்சமாகும்.”
* “கைஸ் இப்னு அபீ ஹாஸிம்” (ரழி) அவர்கள்: “எவருக்கு உலகில் கனிவாக நடந்து கொள்ளக்கூடிய பாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அது அவருக்கு மறுமையில் பிரயோசனமளிக்கும்.”
* “வஹ்ப் இப்னு முனப்பிஹ்” (ரழி) அவர்கள்: “கனிவு அறிவுடன் இணைந்திருக்கும்.”
* எம்முன்னோர்களில் சிலர் கூறுகையில்: “ஈமானை அறிவு அலங்கரிக்கும் போது ஈமான் சிறப்படையும், அறிவை செயல் அலங்கரிக்கும் போது அறிவு சிறப்படையும், செயலை கனிவு அலங்கரிக்கும் போது செயல் சிறப்படையும், அறிவும் கனிவான சுபாவமும் இணைந்திருப்பதைவிட சிறந்தது எதுவும் இருக்கமுடியாது.”

கனிவாக நடப்பதால் உண்டாகும் அநுகூலங்கள்

* கனிவு சுவனத்தின் பால் இட்டுச் செல்லும்.
* கனிவு பூரணமான இஸ்லாத்திற்கும் ஈமானுக்கும் அடையாளமாகத் திகழும்.
* அல்லாஹ்வுடைய மற்றும் மனிதர்களுடைய அன்பு கிடைக்கும்.
* மனிதர்களுக்கு மத்தியில் அன்பு நிலவும்.
* கலவரமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம்.
* இன்மை மறுமை இன்பத்திற்கு உருதுணையாக இருக்கும்.
* ஒருவனின் மார்க்க அறிவுக்கும் நற்பழக்கவழக்கங்களுக்கும் சிறந்த ஆதாரமாகத் திகழும்.

Sunday, May 15, 2011

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!

வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு செயல்படுத்துவதாகும்.

உதாரணமாக, விவசாயம் செய்கின்ற ஒருவர் தனக்கு சிறந்த முறையில் பயிர் கிடைக்கும் என்று மாத்திரம் இறைவன் பால் தவக்குல் (நம்பிக்கை) வைப்பது தவறாகும் மாறாக, தனக்கு சிறந்த பயிர் கிடைகும் என்ற உருதியான நம்பிக்கையுடன் இறைவன்பால் தவக்குல் வைத்து பொறுப்புச் சாட்டிவிட்டு அதற்குறிய காரணிகளாகிய பயிர் செய்கையை பராமரித்த்ல், சீர் படுத்தல், நீர்ப் பாய்ச்சல், கிருமிநாசிக்குரிய மருந்தடித்தல் இன்னும் பல காரணிகளை செய்வதன் மூலமே இறுதியில் சிறந்த விளைச்சல் அவனுக்கு கிட்டும். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்ற ஒருவன் ஏனய விஷயங்களையும் இது போன்றே மேற்கொள்ள வேண்டும். தவக்குலை பற்றி திருக்குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)

“நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்” (08:64)

“எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்” (25:58)

“எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அனைத்துமே இறைவன் மீது தவக்குல் வைக்க வேண்டும் என்பதனை திட்டவட்டமாக தெளிவு படுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் இறைவனை முழுக்க முழுக்க நம்பியிருந்தாலும் தான் வைத்திருந்த அந்த நம்பிக்கையை இறைவன்பால் பொறுப்புச் சாட்டி இருந்தாலும் அதற்குறிய காரணிகளை இனங்கண்டு அவற்றை செய்து வந்தார்கள். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது தன்னை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட இணைவைப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்குறிய காரணிகளை இனங்கண்டு செயல்படுதினார்கள். அவர்கள் மக்காவிலிருந்து மதீனவுக்கு செல்லக்கூடிய திசை வடக்கு பக்கமாகும்.

ஆனாலும் இணைவைப்பாளர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக ஒரு யூதனை பாலைவன வழிகாட்டியாக கூலிக்கு அமர்த்திக் கொண்டு, செல்ல வேண்டிய திசையை மாற்றி தெற்கு திசையாக மதீனாவை சென்றடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏன் தெற்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும்? யூதன் ஒருவனை ஏன் பாலைவன வழிகாட்டியாக ஏன் கூலிக்கு அமர்த்த வேண்டும்? இவை அனைத்தும் நாம் இறைவனை சார்ந்து இருப்பதுடன் சார்ந்திருக்கும் செயலில் வெற்றிக்குரிய காரணிகளை இனம்கண்டு செயல்பட வேண்டும் என்பதனை தெளிவு படுத்துகின்றது.

இதே போன்று தான் ஏனய விஷயங்களுக்கும் உதாரணமாகும். இவ்வாறு சிறந்த முறையில் இறைவனை சார்ந்திருந்து நமது காரியங்களுக்குரிய காராணிகளை இனம் கண்டு செயல்படுத்தினால் நிச்சயாமாக அல்லாஹ் நமக்கு அவற்றை எளிதாக்குவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)

ஒரு உடம்புக்கு எவ்வாறு தலை அவசியமோ அதே போன்று இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றிருக்கின்ற ஒருவனுக்கு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது அவசியமாகும். தவக்குல் மிகப் பெரிய வணக்கங்களில் ஒன்றாகும். இதனாலேயே ஏனைய மார்க்கத்தை ஏற்றிருப்பவர்களை விடவும் முஸ்லிம்களை அல்லாஹ் பிரித்து காட்டுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கவில்லையோ அவன் இறை நிராகரிப்பாளனாக மாறிவிடுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வுடன் சேர்த்து இன்னொருவரை தவக்குல் வைக்கின்றானோ அவன் இணைவைப்பாளனாக மாறுகின்றான். எவரொருவர் அல்லாஹ்வின் மீது மட்டும் தவக்குல் வைத்து அவனையே சார்ந்து இருக்கின்றாரோ அவன் ஏகத்துவவாதியாவான். அவனையே அல்லாஹ் விரும்புகின்றான்; பொருந்திக் கொள்கின்றான். ஏனெனில் இஸ்லாதின் அடிப்படை வணக்க வழிமுறையை அவன் செயல் படுத்துபவனாவான்.

தவக்குலில் இரண்டு விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அவைகளாவன:

1.
அல்லாஹ்வின் மீது மாத்திரமே தவக்குல் வைத்தல்.
2.
தவக்குல் வைத்த விஷயத்தின் கரணியை இனம் கண்டு செயல்படுத்தல்..

இதனடிப்படையில் இறைவன் மீது மாத்திரமே தவக்குல் வைக்க வேண்டும். ஒருவன் ஒரு காரியத்தை செய்கின்ற போது அல்லாஹ் அல்லாதவர்களை நம்பிக்கை வைத்து அவர்களையே சார்ந்து இருந்தால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாக மாறிவிடுகின்றான்.

ஜாஹிலியா கால அரேபியர்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது தங்களது தேவைகளை பொறுப்புச் சாட்டினார்கள்; நம்பிக்கை வைத்திருந்தார்கள். சிலைகளிடத்திலும், கற்களிடத்திலும், மரங்களிடத்திலும் தங்களது தேவைகளை முறைப்பாடு செய்தார்கள். அவற்றையே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவைகள் தங்களது தேவைகளை நிறைவேற்றும் என்றும், தங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை தடுத்து நன்மைகளை நிறைவேற்றித்தரும் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். இன்னும் சிலர் அவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பியிருந்தார்கள். அவைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். இதனாலேயே இவர்கள் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணைவைப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.

இதே போன்றூதான் தற்காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவ்லியாக்களையும் தங்கள்மார்களையும், ஷேக்மார்களையும் முழுமையாக நம்பிக்கை வைத்து அவர்கள் தங்களது தேவைகளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். அல்லது ஒரு நோயை, தீமையை நிறைவேற்றுவதற்காக இஸும் அஸ்மாக்களையும், தாயத்தையும், மந்திரத்தையும், குறிபார்பவரையும் தேடி தங்களது காரியங்களை அவற்றில் முழுமையாக பொறுப்புச் சாட்டி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அல்லது இவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பிக்கை வைப்பதன் மீலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இதனாலேயே அல்லாஹ் இறைவிசுவாசிக்கு நிபந்தனையாக தவக்குல் வைப்பதை சுட்டிக் காட்டி அல்லாஹ்வின் மீது மாத்திரம் தவக்குல் வைத்தால் தான் உண்மையான இறைவிசுவாசி என்பதனை திட்டவட்டமாக தனது இறைவாக்கில் உறுதிப்படுத்துகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (5:23)
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி

இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட!

ரியாளுஸ் ஸாலிஹீன்

ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

''ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.

அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.

இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை!

அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான்.

அது அவனுக்கு நன்மையாக அமைகிறது.

அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான்.

அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது!’ (நூல்: முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கையாளரின் நிலைமை குறித்து வியப்பை வெளிப்படுத்தியது அவரைச் சிறப்பிக்கும் வகையில்தான்! அவரது இறைநம்பிக்கையையும் அதிலிருந்து மலரும் வாழ்க்கைப் போக்கையும் திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டியே நபியவர்கள் கூறினார்கள். அவனது ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது என்று!

தொடர்ந்து அதற்கு விளக்கமும் தந்தார்கள். மனித வாழ்வில் இறைவன் நிர்ணயித்த விதி என்பது – இன்பம் துன்பம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் மனிதர்கள் இருவகையாய்ப் பிரிகின்றனர். நம்பிக்கையாளன் என்றும் நிராகரிப்பாளன் என்றும்!

ஏக இறைவன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் எது ஏற்பட்டாலும் அது இறைவன் நிர்ணயித்ததுதான் என்று நம்பி செயல்படுபவன் நம்பிக்கையாளன்.

வாழ்க்கையில் சிலபொழுது மகிழ்ச்சியும் இன்பமும் அவனை வந்தடைகின்றன. போதிய வசதி வாய்ப்புகள், கண்குளிர்ச்சியான மனைவி – மக்கள், கண்ணியம் காக்கும் உறவுகள் ஆகியவை கிடைக்கின்றன. இவை யாவும் உலக ரீதியான அருட்பேறுகள். இதேபோல் நற்கல்வியும் நல்லமல் செய்யும் நற்பேறும் கிட்டுகிறது. இவை மார்க்க ரீதியான அருட்கொடைகள்!

இத்தகைய மகிழ்வான நேரங்களில் இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துகிறான்.

சில நேரத்தில் வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு துன்பங்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. அப்பொழுது அவற்றை அவன் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறான். அதற்கான கூலியையும் இன்பநிலையையும் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

இவ்வாறு பொறுமை, நன்றி எனும் இவ்விரு பண்புகளும் இறை நம்பிக்கையாளனின் வாழ்க்கையை அலங்கரிக்கும் இரு அணிகலன்களாகும். மனஇச்சைகளும் மாயைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் இலட்சியத்தை நோக்கிய அவனது பயணம் தொடர இருதுருப்புகளாய் அவை பயன்பட்டு மறுமை வெற்றிக்கும் வழிவகுத்துக் கொடுக்கின்றன. எவ்வாறெனில் -

நன்றிக்கு பின்வரும் இறைவசனம் குறிப்பிடுவது போன்று இறையருட் கொடைகளை மேலும் மேலும் ஈர்த்து வரும் ஆற்றலுள்ளது:’ நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களுக்கு மேலும் மேலும் வழங்குவேன்’ (அல்குர்ஆன் 14 : 17)

பொறுமைக்குக் கிடைக்கும் நற்கூலிக்கோ அளவே இல்லை. குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுவது போன்று: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி – நிறைவாய் வழங்கப்படும்’ (அல்குர்ஆன் 39 : 10)

இறைநிராகரிப்பாளனின் நிலையோ இதற்கு நேர்மாறானது. வாழ்வில் அவனுக்கு மகிழ்ச்சி வந்தால் மமதை கொள்கிறான். நமக்கு என்றைக்கும் நற்பேறுதான். நம்மைபோல் உலகில் யாருண்டு என்று ஆணவம் பேசுகிறான். அளவுக்கதிகமாய் பூரித்துப் போகிறான்! இந்த இறுமாப்பு இறை நினைவை விட்டும் அவனைத் திசைதிருப்பும் சாபக்கேடாக அமைகிறது!

இதேபோல் துன்பம் வரும்பொழுது பொறுமை இழந்து பதறித் துடிக்கிறான். ஐயோ! அழிவு காலம் வந்துவிட்டதே என்று கூப்பாடு போடுகிறான் -இப்படிக் காலத்தையும் நேரத்தையும் ஏச அது, இறைவனை ஏசுவதாக ஆகிறது. ஏனெனில் இரவையும் பகலையும் சுழலச்செய்து காலத்தை உருவாக்குபவன் இறைவன்தானே!

இந்நபிமொழி இறைநம்பிக்கைக்கு ஆர்வமூட்டுவதுடன் உள்ளத்தில் விசுவாசம் உள்ளதென்பதற்கு பொறுமை ஓர் அடையாளம் என்றும் உணர்த்துகிறது!

நீங்கள் இறைநம்பிக்கையாளர் எனில், துன்பம் நேரும்பொழுது மனம் சஞ்சலம் அடையாமல் பொறுமையுடன் இருக்கவேண்டும். மாறாக உங்கள் மனம் பொறுமை இழந்து பதறிப் பரிதவித்தால் உங்கள் இறைநம்பிக்கை பலவீனம் அடைந்துள்ளது, பழுதுபட்டுள்ளது என்பதற்கு அது அடையாளமாகும். உடனே நீங்கள் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு உங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திட வேண்டும். (அறிப்பாளர் அறிமுகம்- ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)

ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோம் நாட்டைச் சேர்ந்தவர். ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தைத் தழுவிய நபித்தோழர்களில் குறிப்பிடத்தக்கவர். இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டதற்காக மக்காவில் எதிரிகளால் தொல்லைக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டு பிறகு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அப்பொழுது வியாபாரத்தில் ஈட்டிய பெரும் செல்வத்தை மக்காவிலேயே விட்டு விடும்படியாக ஆயிற்று! அவர்களது தியாகத்தைச் சிறப்பிக்கும் வகையிலேயே இந்த இறைவசனம் இறக்கியருளப்பட்டது: (மக்களில் இப்படியும் ஒருவர் இருக்கிறார்: அவர் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடித் தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகிறார்!) – இவர்கள் ஏராளமான நபிமொழிகளை மனனம் செய்திருந்தார்கள். பெரும் எண்ணிக்கையிலான தாபிஈன்கள் இவர்களிடம் இருந்து நபிமொழிகளை அறிவித்துள்ளனர். ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு மதீனாவில் மரணம் அடைந்தார்கள்!

source: http://islamkural.com/home/?p=3712#more-3712

இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்.


அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.

எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?

என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.

3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.

4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?

மலக்குகள்

5 . உனது நபியின் பெயர் என்ன?

எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.

6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?

எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.

7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?

'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.

8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?

எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.

9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?

நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.

10 . உன் வேதத்தின் பெயர் என்ன?

என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.

11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?

திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)

12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?

ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.

13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?

நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.

14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்

15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?

மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.

16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?

அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)

17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?

தொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.

18. நோன்பு என்றால் என்ன?

இறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.

19 . ஜகாத் என்றால் என்ன?

ஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)

20 . ஹஜ்; என்றால் என்ன?

செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.

21 . ஈமான் என்றால் என்ன?

அல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.

22 . முஸ்லிம் என்றால் யார்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.

23. மலக்குமார்கள் என்றால் யார்?

அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.

24 . நபிமார்கள் என்பவர் யார்?

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.

25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்?

ஆதம் நபி (அலை)

26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ? ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன?

ஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).

27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை? ஆவை யாவை?

திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).

28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது?

தவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும்

ஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்

இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும்

புர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.

29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது?

இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.

30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன?

குர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.

31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை?

குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.

32. அல்லாஹ்வைப் பற்றி கூறு?

அல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.

33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக?

நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர்மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.

34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்?

எந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.

35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்?

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.

36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது?

அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா?

எப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.

38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்?

அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா?

நாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.

40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன?

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.

41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன?

இந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.

42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன?

இதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.

43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது?

ஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.

44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.

'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)

45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?

1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை?

1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது

2. மழை பொழியும் நேரம் பற்றியது

3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து

4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து

5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது

(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)

47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்?

நம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.

48. நரகம் என்றால் என்ன?

மிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.

49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் ?

இறைவனிடமிருந்து தண்டனை.

50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?

இறைவனிடமிருந்து சுவர்க்கம் கிடைக்கும்.

51. சுவர்க்கம் என்றால் என்ன?

மிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.

52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா?

இல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.

53. ஹலால் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.

54. ஹராம் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.

55. கொலையைவிட கொடிய செயல் எது?

பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)

56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'.

57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?

நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)

58. மாற்று மதத்தவரின் உரிமைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் மதிப்பு தரப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹதீஸ் சான்று கூறு?

எவன் ஒருவன் முஸ்லிமல்லாத ஒருவனை அநியாயமாக கொலை செய்துவிடுகிறானோ அவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவுள்ளார்கள்.

(நூல்கள் புகாரி, அபு தாவூத்)

மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)

இஸ்லாமியப் பொதுஅறிவு.

இஸ்லாமியப் பொதுஅறிவு

1. ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,

2. இரண்டாம் மாதம் ஸபர்,

3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,

4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,

5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,

6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,

7. ஏழாம் மாதம் ரஜப்,

8. எட்டாம் மாதம் ஷாஃபான்,

9. ஒன்பதாம் மாதம் ரமழான்,

10. பத்தாம் மாதம் ஷவ்வால்,

11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,

12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?

1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.

2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.

3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது?

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)

7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்

8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்

9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்

10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).

11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி

12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை

13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.

14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)

15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)

16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்

17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)

19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)

20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).

21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)

22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ

23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)

24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்

25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.

26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.

27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)

28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)

29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்

30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்

31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்

32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.

33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)

34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்

35. திருக்குர்ஆன் - இறைவேதம்

36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை

37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா

38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்

39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்

40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்

41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்

42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.

43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை

44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை

45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்

46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு

48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை

49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது

50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்

51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு

52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.

53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்

54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது

55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு