அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Saturday, November 27, 2010

சில கேள்விகள்-சில பதில்கள்!

o பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
o சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?
o குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?
o அழகு என்பது என்ன?
o பணம் முக்கியமா?
o தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
ஆமாம்! ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும். எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம். கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும். அந்தப் பெண் இரை என்று தோன்றும். மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।
அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.


சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?
நட்பு வேறன்ன தான் செய்யும்.சகித்து கொள்வதைக் கூட செய்யவில்லை என்றால் அது எப்படி நட்பாகும். மனிதர்கள் என்பவர்கள் குறையும், நிறையும் கொண்டவர்கள். குறையை மெல்ல சுட்டிக்காட்டி களைவதும். நிறையை மிருதுவாக பாராட்டுவதும் தான் நட்பு. குறையை எப்பொழுது சுட்டிக்காட்டி சொல்ல முடியும், திருத்த முடியும். குறையை சகித்துக்கொள்பவருக்குத் தான் திருத்தவும் புத்தி வரும்.
நிறைவில் தள்ளாடுகிறபோது, பாராட்டுகளில் மயங்குகிறபொழுது மெல்ல கீழிறக்கிவிடுவதும் நட்பு. இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இங்கு இடுக்கண், அதாவது துன்பம் எது தெரியுமா? தன்னை அறியாதவன் தன் நிலை பிறழ்வது, தன்னுடைய பேலன்ஸ் அழிந்து தள்ளாடுகிறபோது பிடித்து நிறுத்துவது தான் நட்பு. சகித்து கொண்டவனுக்குத் தான் தள்ளாடுகிறவரை பிடித்து கொள்ளத் தோன்றும். பரஸ்பரம் சகித்து கொள்ள முடியாது என்பவர் வாழவே முடியாதவர்.
வீட்டில் மனைவியை சகித்து கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை நிறைய பல் காட்டி சகித்து கொள்வார்கள். அது சகித்து கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது.
சகித்து கொள்ள என்ன வேண்டும் தெரியுமா? நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும். தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடை போட்டு உடனே இறக்க முடியும்.
தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்து கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ள முடியாது போன பல உயிரினங்கள் மடிந்து போயிருக்கின்றன. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அந்த சகித்து கொள்ளலுக்கு அடிப்படை அன்பு. அன்பு பற்றி இடையறாது, இடையறாது இந்த உலகம் அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிந்தவர் வெகு சிலரே.


பணம் முக்கியமா?
முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.


குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?
ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா? ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா? ஒரு குழந்தைக்கு கிரகங்கள் எப்படி சுற்றுகின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா? ஆமெனில் SEX கல்வியும் அவசியம்.

அழகு என்பது என்ன?
கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு. அறிவும், அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல. மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.


தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு.
நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள்.
எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.
பதில்கள்: எழுத்தாளர் பாலகுமாரன்
 

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற இதழில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
''நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது'' 4.103
மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான். ஒரு வேலைக்கு நேரம் குறிப்பிடப்படுவதென்பது அதனுடைய ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கின்றது. ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் தொழுதுவிட வேண்டும். இஸ்லாம் அனுமதித்த காரணமின்றி ஒரு தொழுகையை அதன் நேரம் தவறி தொழுவது பெரும் குற்றமாகும். அப்படித் தொழுவதை தொழுகையாக கணக்கிடப்படமாட்டாது.
ஓவ்வொரு வணக்கத்திலும் சில தியாகங்களை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய நேரத்தில் ஒவ்வொரு தொழுகையையும் தொழுவதாகும். ஒரு தொழுகை (சுப்ஹு) தூங்கும் நேரத்திலும், அதனால்தான் சுப்ஹுடைய அதானில் மாத்திரம் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது என்ற வாசகம் கூறப்படுகின்றது. இன்னுமொரு தொழுகை (லுஹர்) வேலை செய்யும் நேரத்திலும் மற்றொரு தொழுகை (அஸர் மஃரிப்) ஓய்வெடுக்கும் நேரத்திலும் இன்னுமொரு தொழுகை (இஷா) சொந்த வேலைகள் செய்யும் நேரத்திலும் கடமையாக்கப்பட்டிருக்கின்றது.
அடியான் தன் பலதரப்பட்ட தேவைகளுக்குரிய நேரங்களிலும் ஒருசில மணித்துளிகளை அல்லாஹ்விற்காக அற்பணிக்கின்றானா என்பதை, இத்தொழுகையின் நேரங்களின் மூலம் அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான். ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவது எவ்வாறு கடமையோ அவ்வாறே ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் நிறைவேற்றுவதும் கடமையே! என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களில் பலர் பல தொழுகைகளை ஒரு நேரத்தில் தொழுவதை வழக்கமாக்கியிருக்கின்றார்கள். அது முற்றிலும் சரி என்றும் கருதுகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். இவர் அத்தொழுகையை தொழுததாக கருதப்படமாட்டாது. அப்படித் தொழுவது கூடுமென்றிருந்தால் தொழுகைக்கு அல்லாஹ் நேரத்தை கடமையாக்கி இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆகவே இஸ்லாம் நமக்கு வகுத்துத் தந்த தொழுகையின் நேரத்திற்குள் ஒவ்வொரு தொழுகையையும் எப்படியாவது தொழுது விட வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தொழுகையையும் அதன் ஆரம்ப முடிவு நேரங்களையும், தொழுகை கடமையாக்கப்பட்ட முதல் இரு நாட்களிலும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்ற ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த நேரத்திற்குள்தான் தொழுகையை தொழ வேண்டும் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு தொழுகையையும் அதன் நேரம் வருவதற்கு முன் நம்மில் யாரும் தொழுவதில்லை. காரணம் அத்தொழுகைக்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அவ்வாறுதன் அத் தொழுகையின் நேரம் முடிந்த பின்பும் அதை தொழுவது கூடாது என்பதை யாரும் மறுக்க முடியாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது.
உதாரணத்திற்கு லுஹர் தொழுகையின் நேரம் முற்பகல் 12.25 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 3.45 மணிக்கு முடிவடைவதாக வைத்து கொள்ளுங்கள். யாராவது முற்பகல் 12.00 மணிக்கு லுஹர் தொழுகையை தொழுவார்களா? அப்படி தொழுதால் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லை என்றே நாம் அனைவரும் கூறுவோம். காரணம் அதற்குரிய நேரம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவ்வாறுதான் 3.45மணிக்கு பின் லுஹரை தொழுவதும் கூடாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. இதை புத்தியுள்ள அனைவரும் அறிவர். இதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது. காலத்திற்கு காலம் தொழுகையின் நேரங்கள் மாறும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழலாம் அவைகள்:
1. பிரயாணம் அதாவது பிரயாணி லுஹர் நேரத்தில் அஸரை முற்படுத்தியும், அல்லது அஸர் நேரத்தில் லுஹரை பிற்படுத்தியும் தொழலாம். அவ்வாறே மஃரிப் நேரத்தில் இஷாவை முற்படுத்தியும் அல்லது இஷா நேரத்தில் மஃரிபை பிற்படுத்தியும் தொழலாம்.
2. தூக்கம் ஆழ்ந்த தூக்கத்தின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை தூங்கி அத்தொழுகையின் நேரம் முடிந்த பின் எழுந்திருந்தால் அவர் எழுந்ததும் அத் தொழுகையை தொழலாம். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றம் பிடிக்கப்படமாட்டார். யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
3. மறதி ஒருவர் மறதியின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை நிறைவேற்றாமல் இன்னுமொரு தொழுகையின் நேரத்தில் ஞாபகம் வந்தால் அவர் அதே நேரத்தில் தொழுது கொண்டால் போதுமானதாகும். அல்லாஹ்விடத்தில் அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
4. அரஃபா மற்றும் முஸ்தலிபாவில் அரஃபாவுடைய நாளில் அஸரை லுஹர் நேரத்தில் தொழுவதும் முஸ்தலிபாவுடைய இரவில் மஃரிபை இஷாவுடைய நேரத்தில் தொழுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
மேல் கூறப்பட்ட காரணமின்றி ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழுவது அர்த்தமற்ற ஒன்றாகும். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாவார்.ஆரம்ப நேரம் சிறந்ததுஒரு தொழுகையை அதன் நேரம் முடிவதற்கு முன் தொழுது கொண்டால் போதுமென்றிருந்தாலும் அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதே சிறந்ததாகும்.அமல்களில் சிறந்தது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
தொழுகையின் நேரங்களை அறிந்து கொள்ளும் முறை
இன்று நம் நாள்காட்டிகளில் (காலண்டர்களில்) தொழுகையின் நேரம் குறிப்பிடப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். அதுவே இஸ்லாம் கூறும் தொழுகையின் நேரமாகும். நமது நலன்கருதி அறிஞர்கள் அதை நமக்கு இலகுபடுத்தியிருக்கின்றார்கள்.
இந்த நேர அட்டவணையை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கற்று கொடுத்தார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவு படுத்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
''கஃபதுல்லாவில் இரு முறை எனக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள் அப்போது (நிழல் செருப்பின்) வாரளவு இருந்தது. நிழல் அந்த பொருளின் அளவாக (நீளமாக) இருந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். செம்மேகம் (சூரியன் மறைந்த போது) மறைந்த போது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள்.
நோன்பாளிக்கு குடிப்பதும் உண்பதும் தடுக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். (இது முதல் நாள் தொழுவித்த நேரம்)
அடுத்த நாள் ஒரு பொருளின் அளவு அந்த நிழல் வந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள்.
ஒரு பொருளின் நிழல் இரு மடங்கு வந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள்.
நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் (சூரியன் மறைந்த போது) எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி வந்தபோது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள். சூரியனின் மஞ்சள் (நிறம்) வருவதற்கு சற்று முன் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். பின்பு என் பக்கமாக திரும்பி முஹம்மதே! இது உங்களுக்கு முன் சென்ற நபிமார்களின் (தொழுகையின்) நேரமாகும். (ஆகவே உங்களுக்குரிய தொழுகையின்) நேரமும் இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும் எனக்கூறினார்கள்.'' (அபூதாவூத்)
மேல் கூறப்பட்ட ஹதீதிலிருந்து நமக்கு கிடைக்கும் விளக்கங்கள்:
1. ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் கற்றுக் கொடுத்தது அல்லாஹ்வே! 2. நமக்கு அறிமுகமில்லாத பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ நாம் பிரயாணம் செய்தாலும் யாருடைய உதவியுமின்றி தொழுகையின் நேரங்களை மேல் கூறப்பட்ட ஹதீதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.அலைஹி3. ஒரு தொழுகையின் நேரம் அடுத்த தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிக்கும் போது முடிவடைந்து விடுகின்றது. ஆனால் சுப்ஹு தொழுகையின் நேரம் அதற்கு அடுத்த தொழுகையாகிய லுஹர் தொழுகையின் நேரம் வரைக்கும் நீடிக்காது. சூரிய உதயத்தோடு அது முடிவடைந்து விடுகின்றது. 4. அஸர் தொழுகைக்கும் இஷாத் தொழுகைக்கும் முடிவடையும் நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று சிறப்புக்குரிய நேரம், மற்றொன்று நிர்பந்த நேரம். அதாவது நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படாதவர்கள் சிறப்பிற்குரிய நேரத்திற்குள் இவ்விரு தொழுகையையும் தொழுது கொள்ள வேண்டும். சிறப்பிற்குரிய நேரத்திற்கு முன் தொழ முடியாதவர்கள் நிர்பந்தமான நேரத்திற்குள் தொழுது கொள்ள வெண்டும். அஸர் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் ஒரு பொருளின் நிழல் அது போன்று இரண்டு மடங்காகும் வரையாகும். அதற்குரிய நிர்பந்தத்திற்குரிய நேரம் சூரியன் மறையும் வரையுமாகும். இஷாத் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் இரவின் மூன்றில் முதல் பகுதி வரையுமாகும். அதற்குரிய நிர்பந்த நேரம் சுப்ஹு வரையுமாகும்.அலைஹி5. ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரங்களுக்குள் தொழுதுவிட வேண்டும். (முற்படுத்தியோ பிற்படுத்தியோ தொழுவது கூடாது) உரிய நேரத்தில் தொழுகையை பேணுவதற்கு வாசகர்களுக்கு நான் கூறும் சில கருத்துக்கள்.1. தொழுகை நேரம் வருவதற்கு சற்று முன்பே தொழுகைக்காக உளு செய்து தயாராகிக் கொள்வதை வழமையாக்கிகொள்ளுங்கள். 2. அதற்கு முடியாதவர்கள் அதான் சொல்லப்பட்டதும் தான் செய்து கொண்டிருந்த அனைத்து காரியங்களையும் நிறுத்தி விட்டு தொழுகைக்காக தயாராகி விடுங்கள்.
3. வெளியில் சென்று கொண்டிருந்தால் அதான் சொல்லப்பட்டதும் பக்கத்திலுள்ள பள்ளியில் தொழுது விடுங்கள்.
4. பெண்கள் அவர்களின் வீட்டிலே முதல் நேரத்திலேயே தொழுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்களின் வீட்டு வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் பாதுகாத்து தொழ நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக! ''Jazaakallaahu khairan'' சுவனப்பாதை மாதஇதழ்  

பெண் பாவம் பொல்லாதது!

[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவரிடம் உள்ள மற்றொரு நற்குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும்’. (அறிவிப்பாளர்: ஹளரத், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தை உணர்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது.]

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (திருக்குர் ஆன் வசனம் 2: 228)
மஹர் தொகைக்கு மாற்றமாக, வரதட்சணை என்பதை திருமணப்பணமாக நாட்டு நடப்பில் கருதப்படுகிறது. அது ஒரு ஹராமான பணம். அது பாவத்தின் சின்னம். அந்த பணத்தை ஒரு தட்டில் வைத்து, அத்துடன் தேங்காய் மஞ்சளும் வைத்து, ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் ஒன்றுகூடி பவ்வியயமாக அத்தட்டை கைமாற்றிக் கொள்ளும் காட்சி இருக்கத்தான் செய்கிறது.

‘இஸ்லாம் மட்டும் தற்கொலையை அனுமதித்திருந்தால் ஊர்க்கிணறுகளிலெல்லாம், வரதட்சணை கொடுக்க முடியாத பெண்களின் சடலங்களால் நிரம்பி வழியும்.’ என்கிறார் ஒரு கவிஞர்.

மணவாளன் அனுபவிப்பது வரதட்சணை பணம் மட்டுமா? ஒரு பெண் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் சீர் சாமான்களையும் அவன் பயன்படுத்துகிறான். தான் படுத்துறங்குவது மனைவி கொண்டு வந்த கட்டிலிலே! தான் உட்கார ஒரு சோஃபா செட்டு கூட வாங்கிப்போட வக்கில்லாதவன் மனைவியின் சோஃபாவிலே சுகம் காணுகிறான். பீரோ என்ன? ஃபிரிஜ் என்ன? உழகை;கத் துப்புக்கெட்ட அவன் பயணம் செய்வது கூட மனைவி வீட்டாரின் பணத்திலே!
ஆனால் சட்டம் என்ன சொல்கிறது:
‘தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை கணவன் பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஒரு பெண்ணுக்கு அதிகாரம் உண்டு.’ (ரத்துல் முக்தார் பாகம் 3 பக்கம் 584)

அதுபோன்றே தனக்குச் சொந்தமான சல்லிக்காசைக் கூட அவள் கணவனுக்குத் தரவேண்டியதில்லை. அவள் அத்தெகையை தனியாக வைத்து சிறு தொழில்கள் மூலம் அந்த முதலீட்டைப் பெருக்கலாம். அவள் அதை தனது பிற்காலப் பாதுகாப்புக்காக சேமித்து வைக்க கடமைப் பட்டிருக்கிறாள்.
சீர் சாமான்களை மட்டுமல்ல, பெண் பெயரில் ஏதாவது வருவாய் இருந்தால் அதையும் ஆண்மகன் உண்டு கொழுக்கிறான். பெண்ணுக்கு வாரிசாகக் கிடைக்கும் சொத்துக்களையும் குடும்பத்துள்ளே போடுகிறான். பெண் ஏமாந்தவளாக இருந்தால், அவள் நகைகளையும் வாங்கி ஏப்பம் விடுகிறான்.
பெண்ணை அனுபவிக்கிறான், பெண் கொண்டுவந்த பொருளையும் அனுபவிக்கிறான். அவள் உதவிக்கரம் நீட்டியதால் உழைப்புக்கும் வழி பெற்றான். இதற்குப் பின்னரும் பெண்ணிடம் ஏதாவது ஒன்று என்றால், ஒரே வார்த்தையை உபயோகித்து மணவிலக்கு செய்து விடுகிறான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவரிடம் உள்ள மற்றொரு நற்குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும்’. (அறிவிப்பாளர்: ஹளரத், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது. பெண்கள் இந்த நியதிக்கு மாற்றமாவர்கள் அல்ல.
கண் அழகாக இருந்தால் மூக்கு அழகாக இருக்காது. மூக்கு அழகாக இருந்தால், முடி அழகாக இருக்காது. அழகிருந்தால் அடங்கி நடக்க மாட்டாள். இரண்டும் இருந்தால் குழந்தைப்பேறு இருக்காது. அதுவும் இருந்தால் அண்டை அயலாரோடு ஒத்துப் போகின்றவளாக இருக்க மாட்டாள். குறையே அற்ற பெண் வேண்டுமென்றால் சுவனத்துக்குத்தான் செல்லவேண்டும்.
ஒரு தோழர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘யாரஸூலல்லாஹ்! எனது மனைவியின் நாவு சற்று நீளமாகிறது (அண்டை அயலாரிடம் சண்டை வளர்ப்பவளாக இருக்கிறார்)’ என்று கூறினார். அது கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை சோதிப்பதற்காக, ‘அப்படியானால் அவளை தலாக் விட்டு விடுங்களேன்!’ என்றார்கள். ‘இல்லை யாரஸூலல்லாஹ்! அவள் நிறைய குழந்தைகளைப் பெற்றுத் தந்திருக்கிறாள். என் மீதும், என் குழந்தைகளின் மீதும் அதிகப்பரிவு காட்டுகிறாள்’ எனக்கூறினார் அந்த தோழர். ‘அப்படியானால் அவளுக்கு உபதேசம் செய்யுங்கள்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள் (அறிவிப்பாளர்: ஹளரத், லகீத் பின் ஸமுரா (ரளி), நூல்: அபூதாவூது)

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என்றொரு பழமொழி வழக்கில் உண்டு. அது போன்றுதான் எல்லாக்குடும்பத்து நிலையும். அதைப் புரிந்து கொள்ளாத சிலர் சில சில்லரைக் காரணங்களுக்காகவெல்லாம் பெண்ணை மணவிலக்கு செய்து விடுகிறார்கள்.
மனைவியின் தயவினால் சம்பாதிக்க ஆரம்பித்த சிலருக்கு நாலுகாசு சேர்ந்தவுடன் வறுமையின் நேரத்தில் கரம் பிடித்த பெண் தற்போது பொறுத்தமானவளாகத் தோன்றவில்லை. தற்போதைய தன் நிலைக்கு பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும் எனக் கற்பனை செய்து கொண்டு சிலர் தனது மனைவியைத் தலாக் விட்டு விடுகின்றனர்.
அதுவும் அவளிடமிருந்த பணத்தையெல்லாம் உறிஞ்சி குடித்துவிட்டு அவளை வெறுங்கையுடன் விட்டுவிடுகிறான். ஊர் பஞ்சாயத்துக் கூடி அவனிடமிருந்து எதையாவது மீட்டு பெண்ணிடம் ஒப்படைக்கலாமென முயன்றால், உபயோகித்து உடைந்துபோன சீர் சாமான்களைத்தான் திரும்பப்பெற முடிகிறது. வரதட்சணையாக வைத்துக் கொடுத்த பணம் வராத தட்சணையாக மாறிவிடுகிறது. சட்டப்படியும் அதைத் திரும்பப்பெற உரிமையில்லை, அதனால் தலாக் விடப்பட பெண் தனது ஜீவனாமசத்துக்கும் வழியில்லாமல் ஆதரவின்றி விடப்படுகிறாள். இந்த நிலையைக் காணும் சகோதர சமயத்தவர் இஸ்லாத்தின் சட்ட நியதிகளைக் குறையுடன் நோக்குகிறார்கள்.
இந்த நிலையைப் போக்குவதற்கு ஜமா அத்தார்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவன் ஒருலட்சம் ரூபாயை வரதட்சணையாகப் பெற்றால் ஒருலட்சத்து ஆயிரம் ரூபாயை மஹராக ஊர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவன் பெண்ணை தலாக் விட்டுவிட்டால் அந்த ஒருலட்சத்து ஆயிரத்தையும் சட்டப்படி அவனிடமிருந்து வசூல் செய்து விடலாம். கார், பங்களா, மொபெட் போன்று பொருட்களை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டால், அந்தப்பொருட்களின் விலைமதிப்புடன் 1000 ரூபாய் சேர்த்து கடிதப்புத்தகத்தில் மஹராகப் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய ஏற்பாடு செய்தால் பெண்ணின் கண்ணீரைத் துடைக்க முடியும்.
சோரம்போன பெண்!
தலாக் நிகழ்வதற்கு பெண்கள் சோரம் போய்விடுவது காரணமாக அமையலாம். ஆனால், சில பெண்கள் சோரம் போவதற்கு ஆண்மகனே காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தனது பெண்மக்களை மிகவும் பாதுகாப்பாகவே வளர்க்கிறார்கள். ஒருவனிடம் கைபிடித்துக் கொடுக்கும்வரை எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று கண்காணிப்பாகவே இருக்கிறார்கள். ஜன்னலில் நிற்காதே! ஆடவர்களுடன் பேசாதே! என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து பாதுகாத்து பத்தினித்தனமாகவே ஒரு ஆண்மகன்கையில் ஒப்படைக்கிறார்கள்.
ஆனால், அவன் மணமுடித்த புதிதில் அவள் மிகவும் நாகரீகம் தெரியாதவளாக இருக்கிறாள் என்று கூறி கடிந்து கொள்கிறான். அவள் நாணப்படுவதை தடுக்கிறான். தனது நண்பர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறான். தன்னுடன் வெளியில் வரும்போது வெளியுலகிற்கு அவள் அழகாகக் காட்சி தரவேண்டுமென வற்புறுத்துகிறான்.
இதனால் அவள் சோரம் போய்விடுகிறாள். அவள் சோரம் போனதற்கு அவன் காரணமாக இருந்தால், அவன் தலாக் விடும் முன் சற்று யோசிக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றில் இறைவனுக்கு கோபத்தை தரக்கூடியது தலாக் என்பதையெல்லாம் அவன் சிந்தனை செய்ய வேண்டும். ஆம்! பெண்பாவம் பொல்லாதது.
நன்றி: குர்ஆனின் குரல்