அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Friday, January 7, 2011

ஆலோசனையின் அவசியம்

மவ்லவி, மு.ஷேக் முஹ்யித்தீன், உடன்குடி
இவ்வுலகில் எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்து அதில மனித இனத்தை மேன்மையாக்கிய இறைவன் மனிதன் வழி தவறாதிருக்க சில வழிமுறைகளையும் தானே கற்றுத்தருவதோடு, தமது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அதன்படி நடக்கச்செய்து அவ்வழிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றதுதான் என்பதை உறுதி செய்கிறான்.

இவ்வரிசையில் இடம்பிடிப்பதுதான் ஒருவருக்கொருவர் ‘ஆலோசனை’ செய்து கொள்ளல் வேண்டும் என்ற நடைமுறை. இதன்மூலம் பற்பல இடையூறுகள் தவிர்க்கப்படுகின்றன. கருத்துவேற்றுமை ஏற்படாமலிருக்கின்றன. எக்காரியத்தையும் இலகுவாக சாதிக்க ஏதுவாகின்றது. இதுபோன்ற மேலும் பல நற்பயன்களும் இதில் புதையுண்டு கிடக்கின்றன.
அல்லாஹ்வின் ஆலோசனை
எக்காரியமாக இருந்தாலும்சரி, ஆலோசனையின் பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நியதி நேற்றின்று உருவானதல்ல. மனித அறிவினால் உருவாக்கப்பட்டதும் அல்ல. இத்தரணியையும், தரணிவாழ் மக்களையும் படைத்து நிர்வாகம் செய்கின்ற அல்லாஹ்வே எதுவாக இருந்தாலும் ஆலோசனையுடன் செயல்படுத்து என்று கற்றுத்தருவதற்காக தானும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அனைத்தையும் படைத்து பரிபாளிக்கக்கூடிய இறைவன்; யாரிடம் போய் ஆலோசனை கேட்பது? ஆலோசனைக் கேட்க வேண்டிய அவசியம்தான் என்ன? ஆனால் ஆலோசனை கலக்கின்றான்.

எதற்காக?
நாமும் ஆலோசனை செய்து காரியமாற்றவேண்டும் என்கின்ற முக்கியமான பண்பை விளங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக!
இறைவன் திருமறையில் இரண்டாவது அத்தியாயமான ‘அல்-பகரா’ வின் 30 ஆவது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்: இறைவன் இவ்வையகத்தைப் படைத்து அதில் தனது பிரதிநிதியாக மனித வர்க்கத்தை உருவாக்கி நினைத்தபோது 'நான் பூமியிலே எனது பிரதிநிதிகளைப் படைக்கப் போகின்றேன்’ என மலக்கு(வானவர்)களிடம் கூறினான். அவ்வானவர்களின் பதில் வேறொன்றாக இருந்த போதிலும், இறைவன் மலக்குகளுக்கு தெரிவித்ததிலிருந்து கலந்தாலோசிக்கும் பண்பை நமக்குக் கற்பிக்கிறான் என்பதை சிந்தித்துணர வேண்டாமா? 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலோசனை 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் ஆலோசனை செய்வதற்கு ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.

பத்ருகளம் வெற்றியடைந்த கையோடு களிப்போடு அனைவரும் அமர்ந்திருக்க பிடிபட்ட கைதிகள் குறித்து தமது மூத்த தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஆலோசனை செய்த வரலாற்றுக் குறிப்பை எவர்தான் மறக்க முடியும்?
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதமொன்று வரைகிறார்கள். அதில் ‘நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் விஷயங்களில் கலந்தாலோசித்திருக்கிறார்கள். எனவே அதையே தாங்களும் பின்பற்றுங்கள்.’ (நூல்: தப்ரானி) என்று செய்தி அனுப்புகிறார்கள்.
இதற்கு மேலும் வலுவுhட்டும் ஆதார சம்பவமாக அகழ்போரை நினைவு படுத்திப் பார்க்கலாம். போர் தந்திரங்களில் அகழ் தோண்டும் பழக்கம் அரபிகளிடத்தில் இல்லாத நிலையில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தாமே முன்னின்று அகழ் தோண்டுவதற்கு உதவி செய்து மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனை குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகள் ஆலோசனையின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்த முடிவில் ஸஹாபாக்கள் திருப்தி கொள்ளாது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியபோது உம்முல் முஃமினீனான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட்டு அதற்கு தீர்வு கண்டார்கள் என்பது பெண்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 33 ஆவது வசனத்தில் குடும்பவியலைப் பற்றி பேசுகிற இறைவன் கணவனும் மனைவியும் இனிமேல் இணைந்து ஒற்றமையாக வாழ முடியாத வண்ணம் பிணக்குகள் அதிகமானால் கணவன் சார்பாக ஒரு நீதவானையும், மனைவியின் சார்பாக மற்றொரு நீதமானவரையும் கலந்தாலோசித்து இருவரும் இணைந்திருப்பதே நல்லது எனில் இருவரையும் இணைத்து வைப்பார்கள் என்று கருத்து கூறுகிறான்.
இங்கே இருவரின் சார்பாகவும் பிரதிநிதிகள் வரவேண்டும் என்பதிலிருந்தே கலந்தாலோசிப்பதின் அவசியம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆலோசனை பெறப்படும் ஒவ்வொருவருமே தமது கருத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நப்பாசைக் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் நினைவுகூற இந்த இடம் பொறுத்தமானதே!
சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும், ஏன் ...? தனிப்பட்ட சிறு சிறு விஷயங்களில்கூட இந்த யுக்தியைக் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கையருகில் என்று சொல்லவும் வேண்டுமோ!

No comments:

Post a Comment