அபூ ஸஃபிய்யாஹ் 
 [ உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான  செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே  இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]
காதல் என்றால் என்ன?
எதிர்பாலினர்  மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை  அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர்  இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின்  விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின்  இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின்  வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும்  மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை  என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை  எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே  முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல்  இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர். 
பருவ மாற்றம் காரணமாக  இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு  உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும்  இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும்  ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.
காமம் என்பதில்  காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால்  காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு  பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம்.  திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும்.  இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம். 
ஒரு ஆணும் பெண்ணும்  தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு  நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பaதை  விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும்  பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள்  கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள்  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான  வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு,  நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை  போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான்  நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே.  காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா... 
கல்லூரி மற்றும்  அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை  பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன்  பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும்  காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம்.  பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும்  காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற  பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். 
குடும்பத்தை  பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக்  கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது.  அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு  இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக  பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை  பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும்  என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான்  அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட  பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள்.  பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல்  என்று கூறிவிடலாம்.
சினிமா  நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை  சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து  கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள்.  இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும்  பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும்,  குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில்  உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக  இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை  காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்.  எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே  காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது  முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும்.  அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும்  சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும்,  காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது  அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே  இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம்  நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக  இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ  மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள்  காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு  பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல் 
உண்மையான காதல்  என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான  காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு  படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு  சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம்  உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான். முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!''

 
No comments:
Post a Comment