| 
 
    செருப்பு - நபிமார்களின் அணிகலன் !      
உச்சியிலிருந்து கரண்டைக்காலுக்கு மேல்வரை துணிகளால் தன்னை  அலங்கரித்துக் கொள்ளும் ஒருவன் கால்களுக்கு மட்டும் சற்று வித்தியாசமானதை  செருப்பாக அணிந்து கொள்கிறான். அதை அணிந்தே பழக்கப்பட்டவர்கள் அதை அணியாமல்  வெளியில் செல்வதை விரும்ப மாட்டார்கள். சுத்தத்தையும், சுகாதாரத்தையும்  விரும்பும் ஒவ்வொருவரும் அதன் அவசியத்தை உணர்ந்தே இருக்கிறார்கள்.  கோடைக்கால வெயிலில் அதன் உதவி இல்லாவிட்டால் எங்கும் போக முடியாது.
 
 
 
கல், கண்ணாடித்துண்டு, முள்களிலிருந்தும்,  அறுவறுப்பானவைகளிலிருந்தும், நஞ்சுமிக்க விஷப்பூச்சிகளிலிருந்தும் இதன்  மூலம் பாதுகாப்புப் பெறுகிறோம். நிராயுதபாணியாக இருக்கும்போது ஒன்றை  அடிக்கும் ஆயுதமாகவும் கூட அது பயன்படுகிறது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும்  ஆயுதமாகக்கூட அது பயன்படுகிறது என்பதை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி  ‘புஷ்’ஷின் மீது வீசப்பட்ட செருப்பின் பிரசித்தம் உலகம் அறிந்த ஒன்றாக  இருப்பதை எவர்தான் மறக்க முடியும்! 
 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர் ஹளரத் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு  "ஸாஹிபுந் நஃலைன்" -செருப்புக்காரர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டதை  வரலாறு எடுத்துரைக்கின்றது. காரணம் நடப்பதற்காக அவர்கள் நின்றால் செருப்பு  அணிவதோடு, அமர்ந்தாலும் தன் கரங்களில் அவற்றைத் தன்னுடன் எப்போதும்  வைத்திருப்பார்கள். (மிஷ்காத்)
 
"செருப்பு நபிமார்களின் அணிகலன்" என்பதாக ஹளரத் இப்னுல் அரபி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் செருப்பிற்கு இரண்டு மேல் வார்கள் இருந்தன என ஹளரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
 நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செருப்பணிந்த விபரத்தை இறைமறையாம் திருக்குர்ஆனே குறிப்பிடுகிறது.
 
 
 
சமீபத்தில் ஒரு பத்திரிகை, மருத்துவப் பேராசிரியர்  ஒருவரின் பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் அவர், "வெயிலில் செல்லும்போது  குடையில்லாமல்கூட செல்லலாம்; ஆனால், செருப்பு அணியாமல் செல்லக் கூடாது  என்றார்.
 
 
செருப்பணியும்போதும் நபிவழியில் நாம் நடந்தால் ஒரு சுன்னத்தைக் கடைப்பிடிக்கும் நன்மையும் நமக்குக் கிடைக்கும். 
பெருனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் அருளினார்கள்:  "உங்களில் ஒருவர் செருப்பணிந்தால் வலது (காலைக்) கொண்டு ஆரம்பிக்கவும்.  சுழட்டும்போது இடது (காலைக்) கொண்டு ஆரம்பிக்கவும். காலணி அணிவதில் வலது  கால் முந்தவும்; சுழட்டுவதில் பிந்தவும் இருக்கட்டும்" (நூல்: புகாரீ,  முஸ்லிம்)
 
 
செருப்பைப்பற்றி எழுதும்போது கீழ்காணும் ஹதீஸை சொல்லாவிட்டால் இந்த சிறு கட்டுரை நிறைவடையாது. ஆம்!
 
 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் "செருப்பின் வார் அறுந்து போனாலும் அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்." 
 
 | 
No comments:
Post a Comment