அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Thursday, March 28, 2013

நன்மை பயக்கும் நபிமொழி

பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும்
"ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஈர்வலி சீப்பு ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்'' என்று கூறி விட்டு, "(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4358)
 சப்தமிட்டு திக்ர் செய்யாதீர்கள்
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்றும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூசா அல்-அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2992)
 எந்த உணவையும் ஒரு போதும் குறை சொல்லாதீர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டு விடுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5409)
 வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "உங்களுக்கு முன்னிருந்த(சமுதாயத் த)வர்கள் தங்களுடைய நபிமார்கள், நற்குணங்கொண்டோரின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்துவிட வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறியதை நான் செவியுற்றேன். (அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 827)
 சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட...
'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு, "அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயீ 148)

அன்னை ஃபாத்திமா[ரலி]

இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்''
அல்-குர்'ஆன் 3 ;37
மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;

ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.

பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு
முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.

மேற்கண்ட பொன்மொழியில் அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்களின் பல நற்பண்புகள் மற்றும் இறையச்சம் மிளிர்வதைக் காணலாம். தனக்கு ஏதேனும் உணவு கிடைத்தால், அன்னை மர்யம்[அலை] அவர்கள் எப்படி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தி, ''அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்களோ, அதே போன்று அன்னை பாத்திமா[ரலி] அவர்களும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் குணத்தை கொண்டுள்ளதால், அன்னை பாத்திமா[ரலி] அவர்களை, அன்னை மர்யம்[அலை] அவர்களோடு ஒப்பிட்டு நபி[ஸல்] அவர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், நமக்கு ஒரு நலம் விளையுமானால் இது அவரால் விளைந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வாத்தை நம்மிடம் வெளிப்படவேண்டும். அவ்வாறு அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும்.

 எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னை மர்யம்[அலை] மற்றும் அன்னை ஃபாத்திமா[ரலி] ஆகியோர் மீது நல்லருளை நல்கிடுவானாக!  
 
 
 

பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்




பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்
ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.

''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)

'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)

ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மனைவியான ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.

கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் உம்மு குல்ஸூம் ரளியல்லாஹு அன்ஹா மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.

''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹாரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.

''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)

முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''

''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)

அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப்படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.